You are here :

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS
விரதத்தின் நன்மைகள்

June 21, 2016


விரதம் இருப்பது மூடநம்பிக்கை....இல்லையில்லை அது மத நம்பிக்கை என இருவேறு கருத்துக்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால், உண்மையில் விரதத்திற்கு பின்னால் இருக்கிறது மிகப்பெரிய விஞ்ஞானம். 

விரதம் இருப்பது ஏன்...?

'அன்னத்தை அடக்கியவன் ஐந்தை (கண், காது, மூக்கு, வாய், உடல்) யும் அடக்குவான்' என்பார்கள். இவைகளை கட்டுப்படுத்தும்போது, நம் மனம் ஞானத்தை தேடி செல்கிறது என்பதை அத்தனை தத்துவ ஞானிகளும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். வாயை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணில் பட்டதையெல்லாம் வயிற்றுக்குள் அடைத்து விடுவது, பிறகு பல்வேறு உபாதைகளுக்கு பிறகு, உணவுக்கட்டுப்பாட்டில் இருப்பது இன்றைய காலகட்டத்தில் வழமையாகிப் போன ஒன்று.

மக்களின் மன ஓட்டத்தை அறிந்துகொண்ட வணிக மருத்துவ உலகம் நியூட்ரிஷியன், டயட்டீஷியன் ஸ்பெஷலிட்டுகளை உருவாக்கி கல்லா கட்டிவருகிறது. 'அதை சாப்பிடுங்க, இதை சாப்பிடுங்க' எனவும், நாம் எப்போது சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும் எனவும்  கட்டளை போடுகிறார்கள். பெரியவர்கள் சொன்னதைக் கேட்டு, தொடர்ந்து பின்பற்றி வந்திருந்தால் இன்று டயட்டீஷியன்களை தேடி நாம் ஓட வேண்டியதில்லை. 

நமது வயிறு 15 நாட்களுக்கு ஒருமுறையாவது காலியாக இருக்க வேண்டும். இதனையொட்டித்தான் அமாவாசை, பெளர்ணமி என விரதங்கள் எல்லாம் வரையறுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. விரதமிருப்பதால் வயிறு சுத்தமாகிறது. ஜீரண உறுப்புகள் சீராகிறது என்கிறார்கள் சித்த மருத்துவர்கள். இந்த அடிப்படையில்தான் எல்லா மதங்களுமே விரத்தை தூக்கிபிடிக்கின்றன. சபரிமலை ஐய்யப்பனுக்கு மாலையிட்டு ஒரு மண்டலம் எனப்படும் 48 நாட்கள் விரதமிருந்து மலைக்கு போய் வருகிறார்கள்.

அதேபோல பழனி முருகனுக்கும் விரதம் இருந்து மாலைபோட்டு போகிறார்கள். அன்னதானங்கள் ஊரெங்கும் வழங்கப்படுகிறது. சுய ஒழுக்கங்கள் வரையறை செய்யப்படுகிறது.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்து, உயிர்த்தெழுந்த தினமே ஈஸ்டர் திருநாளாகக்  கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைக்கு முன் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் விரதம் மேற்கொள்வர். இதைத் தவக்காலம் என்கிறார்கள். கிறிஸ்தவர்களில் கத்தோலிக பிரிவினர் வேளாங்கன்னிக்கு மாலையிட்டு விரதம் இருந்து வருகிறார்கள்.

ரமழான் மாதத்தில் 30 நாள் நோன்பிருப்பது முஸ்லிம்களுக்கு கடமையாக்கப்பட்டுள்ளது. ஒழுக்கம், தர்மம் என்ற கோட்பாடுகள் முன்னிலைப்படுத்தப்படுகிறது. ஒருவர் சேமித்தவற்றில், குறிப்பிட்ட அளவை உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும் வழங்க வேண்டும் என்பதற்காக ஜகாத், பித்ரா, சதகா போன்ற தர்மங்கள் என்பது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

சமணர்களின் ஷ்ராவண மாதத்தில் விரதம் இருந்து, பின்னொரு நாள் ஒருவரை ஒருவர் சந்தித்து 'மிச்சாமி துக்கடம்'  என சொல்கிறார்கள். சென்ற காலத்தில் நான் ஏதேனும் வகையில் உன்னைப் புண்படுத்தியிருந்தால் என்னை மன்னித்து விடு என்று அர்த்தமாம். சமண மதத்தில் பாரம்பரியமாக பின்பற்றப்படும் தவ நிகழ்வான 'சல்லேகனை விரதம்' மோட்சம் அடைவதற்காக ஆகாரம் உண்ணாமல் பின்பற்றப்படும் ஒரு விரதம் என்கிறார்கள்.

வருடத்தின் ஆரம்பப்பகுதியில் 40 நாள் உபவாசம் இருப்பது பூர்வ பாபிலோனியர்கள், எகிப்தியர்கள், கிரேக்கர்கள் ஆகியோர் மத்தியில் சகஜமாக இருந்து வந்திருக்கிறது.

மொத்தத்தில் சகல மார்க்கங்களும் விரதத்தை உடலையும், மனதையும் செம்மைப்படுத்தும் விஷயமாகவே வழிநடத்தி வந்திருப்பதை அறியலாம்.

இல்லாதவர்களுக்கு கொடுத்து எல்லோருக்கும் எல்லாமும் சென்றடைய வேண்டும் என்ற பொதுநலத்தையும் போதித்து வந்திருக்கிறார்கள். இன்னொரு முக்கியமான நிஜம் என்ன தெரியுமா? எந்தவொரு விஷயத்தையும் 48 நாட்கள் அதாவது ஒரு மண்டல காலத்துக்கு தொடர்ந்து செய்யும்போது, இயல்பாகவே அதற்கு நம் மனமும், உடலும் பழக்கப்பட்டுவிடுகின்றன என்பது நிரூபிக்கப்பட்ட உளவியல் உண்மை.

உடல் நலம், மன நலம், பொது நலம் கலந்த விரதங்களை அதன் புராதன கதைகளை மட்டும் கேட்டு புரிபடாமல் விட்டுவிடாமல், அதன் காரணங்களை அறிந்து, அதற்குள் உள்ள விஞ்ஞானத்தை புரிந்து பின்பற்றினால், இந்த உலகமே புதிதாய் மாறும் என்பதில் சந்தேகமில்லை.