You are here :

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




பத்மஸ்ரீ, சங்கீத ரத்னாகர கே.வி.நாராயணசுவாமிநாதன்.

October 15, 2014


எம்.எஸ். ஜி.என்.பி., ரி.எம்.எஸ். எனச் சில எழுத்துக்களால் தம்மை அடையாளப்படுத்தி பிரபலம் வாய்ந்த இசை விற்பன்னர்களைப் போலவே கே.வி.என். எனும் எழுத்துக்களால் இசையுலகில் பெரும் ஜாம்பவானாகத் திகழ்ந்தவரே பத்மஸ்ரீ, சங்கீத ரத்னாகர கே.வி.நாராயணசுவாமிநாதன். வயலின் வித்துவான் தொல்லங்கோடு நாராயண பாகவதரின் பேரனான இவரின் தந்தையார் வயலின் வித்தகர் விஸ்வநாத பாகவதர் ஆவார். இசைப் பாரம்பரியத்திலே வந்த இவரது தாயாரின் பெயர் முத்துலக்ஷ்மி அம்மாள். பாலக்காடு அருகேயுள்ள கிராமமொன்றில் 1923 நவம்பர் 15ஆம் திகதி பிறந்த இவர் இசைச்சூழலில் வளர்ந்தமையால் இளமையிலேயே பள்ளிப்படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு தாத்தா, தந்தையார் இன்னும் C.L.கிருஷ்ணையர் ஆகியோரிடம் இசை கற்கத் தொடங்கினார். இயற்கையான குரல்வளமும் இசையில் பிரமிப்படையக்கூடிய வகையில் இனிமையும் வளமும் திறமையும் வெளிப்பட்டமையால் பத்து வயதை எட்ட முன்னரே முதலாவது இசைக்கச்சேரி ஒரு கோவிலிலே இடம்பெற்றது. இக்கச்சேரியே பல மேடைகளைக் கண்ட வித்வான்கள் போலக் களை கட்டிப் புகழ்வானைத் தொட்டது. இசை ஞானத்தோடு பாடுவோரைப் பாகவதர் என அழைக்கும் முறை அக்காலத்தில் நிலவியதால் கே.வி.என். அவர்களையும் இளமையிலிருந்தே கே.வி. நாராயணசுவாமி 'பாகவதர்' என்ற பெயரும் பிரபலமாகியது. தேனினும் தஞ்சுவையான குரல், இசை ஞானம் கம்பீரமான அழகிய இளமைத்தோற்றம் இவையெல்லாம் ஒன்றிணையவே 'கண்ணப்ப நாயனார்' படத்தில் கே.வி.என். பாகவதரையே பால கண்ணப்பர் வேஷத்தில் திரைப்படத்தில் நடிக்க வைத்தனர்.  அபாரமான நடிப்பும் பாடலும் திரைப்படத்துறைக்கு வெற்றியை ஈட்டிக்கொடுத்தாலும் இதுவே இவரது முதலும் கடைசியுமான திரைப்படக் காட்சியானது.