You are here :

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




தமிழியல் ஆய்வுக்கு கல்வெட்டியல் வலுவூட்டிய பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை

February 05, 2016


கல்வெட்டியல் வழியாகத் தமிழர்  வரலாற்றையும் மொழி வரலாற்றையும் ஆராயும் மரபை இலங்கைப் பல்கலைக்கழகத்திலே தொடக்கிவைத்தவர் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை.

அந்த மரபை மேலும் வினையாற்றலுடன் முன்னெடுத்தவர் பேராசிரியர் ஆ.வேலுப்பிளளை (1936-2015) கல்வெட்டியல் திராவிட மொழியியல், முதலாம் துறைகளில் அவரது ஆழ்ந்த புலமைப் பங்களிப்பு தடம்பதித்து நீட்சியுற்றது.

பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை மற்றும் பேராசிரியர் க.கைலாசபதி ஆகியோரின் வரவோடு பல்கலைகழகத் தமிழ்த் துறை ஆய்வுகளில் இரு நிலை வளர்ச்சி ஏற்படத் தொடங்கியது.

மொழி நிலைப்பட்ட ஆய்வு மற்றும்  இயங்கியல் நிலைப்பட்ட ஆய்வு என்ற தெளிவான இருமை நிலைகள் மேலெழுந்தன. மொழிநிலைப்பட்ட ஆய்வை கல்வெட்டியல் ஆதார ஆழங்களோடு முன்னெடுத்தவர் பேராசிரியர்  ஆ.வேலுப்பிள்ளை.  

பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை யாழ்ப்பாணத்துத்  தென்புலோலி ஊரின் கல்விப் பின்புலத்தோடு மேலெழுந்தவர்.

மரபுவழித் தமிழ்க் கல்வியின் செழிப்போடு நிறைந்தது புலோலிக்கிராமம்.

அங்குள்ள கல்வியோடு நிரம்பிய ஒரு சிறப்புப்பண்பு, காரணங்காணலோடு  இணைந்த பகுத்தறிவியல்  எந்த ஒரு விடயத்தையும் காரண காரியத்தொடர்புடன் நுணுகி ஆராயும் ஆற்றல் பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அவர்களின் தனித்துவத்தை உருவாக்குவதில் விசை கொண்டு செயற்பட்டு வந்தது. மரபு வழித் தமிழ்க் கல்வியின் ஊட்டமும் தீவிர நியாயித்தலுடன் முடிவுகளுக்கு நகரும் ஆற்றலும் அவருக்குரிய கல்விச் செறிவுடன் இணைந்திருந்தன.

தொடர்ந்து கல்வெட்டியல் தேடலை அவர் முன்னெடுத்துச் சென்றார்.                 

பிரித்தானியாவில் உள்ள ஒக்ஸ் போட்  பல்கலைக்கழகத்தில் மேலும் ஒரு கலாநிதிப்பட்ட ஆய்வை 1962ஆம் ஆண்டில் முன்னெடுத்தார்.

கி.பி.800 ஆம் ஆண்டிலிருந்து 920ஆம் ஆண்டு  வரையிலான கல்வெட்டுக்களில் தமிழ்மொழியின் நிலை என்ற கருப்பொருளில்                    பேராசிரியர் பர்ரோ அவர்களின் நெறிப்படுத்தலில் ஆய்வை மேற்கொண்டு கலாநிதிப்பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.

இலங்கையிலும் தமிழகத்துக்கு அப்பாலும் தமிழ்மொழியினதும் தமிழர் அடையாளங்களினதும்   புலப்பாடுகள் கொண்ட கல்வெட்டுக்கள்                   மறைக்கப்படும் அவலமான நிலையை பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை துணிவுடன் சுட்டிக்காட்டி வந்தார். புலமை நேர்மையானது, அரசியலுக்காகத் துஷ்பிரயோகம் செய்யப்படுதலையும் வெளிப்படுத்தினார்.

கல்வெட்டியல் ஆய்வில் அரசியலும் இனவாத நோக்கும் உள் நுழையும் புலமைக்கு முரணான செயற்பாடுகளைத் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்தார்.

பேராசிரியர் வேலுப்பிள்ளை அவர்கள் முதலாவது பட்டத்தைத் தொடர்ந்து இலங்கை நிர்வாக பரீட்சையிலும் சித்தியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவரிடத்து வளர்ச்சி பெற்றிருந்த புலமை நாட்டம் உயர் நிர்வாகப் பதவியைப் பெற்றுக் கொள்வதை நிராகரிப்புக்கு உள்ளாக்கியது.

பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் தமிழ்த்துறைத் தலைவராக இருந்த காலத்தில் தமிழ்மொழிக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் தளரா உறுதி பூண்டிருந்தார்.

இலக்கணம், இலக்கண வரலாறு, தமிழ்மொழி வரலாறு முதலியவற்றைக் கல்வெட்டுக்  கற்பிக்கும் முறைமையைத் தமிழ்த்துறையில் வளப் படுத்தினார்.

பேராசிரியர் வேலுப்பிள்ளையின் ஆழ்ந்த புலமை அவர் எழுதிய நூல்களிலும் வெளிப்பட்டது.

அவர் எழுதிய ''தமிழ்  வரலாற்றிலக்கணம்'' காலவளர்ச்சியில் தமிழ் இலக்கணப்படி மலர்ச்சியை விளக்குவதாக அமைந்துள்ளது.

எழுத்தியல், சொல்லியல், பெயரியல், வினையியல், இடையியல், தொடரியல், சொற்பொருளியல் என்ற நிலைகளிலே தமிழ் இலக்கண வளர்ச்சியை விரிவாக ஆராய்வுக்கு உட்படுத்தினார்.

திருவனந்தபுரத்தில் உள்ள திராவிட மொழியியற் பள்ளியில் முதுநிலை ஆய்வாளராகவும் கேரளப்பல்கலைக்கழகத்தின் வருகைப்                       பேராசிரியராகவும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் முதுநிலைப் பேராசிரியராகவும் பணிபுரிந்தார்.

யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் அவர் பணியாற்றிய வேளை போர் தீவிரம் பெறத் தொடங்கியது. 

குண்டு வீச்சுகள், ஷெல் அடிகள், துப்பாக்கிச் சூடுகள், சுற்றிவளைப்புக்கள் முதலிய அவலங்களினூடே கற்றலும் கற்பித்தலும் நிகழ்ந்து கொண்டிருந்தது.

அவர் கற்பித்த மாணவர்களே குண்டு வீச்சுக்கு இரையானார்கள்.

அவற்றைக் கண்டு பொறுக்கமுடியாத நிலையில் அவர் தமது குடும்பத்துடன் ஐக்கிய அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்து சென்றார்.

அவரது புலமைக்குச் சென்ற நாடுகளில் எல்லாம் உயரிய அங்கீகாரம் கிடைத்தது.