You are here : Arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS
14 வயது முதல் தமிழுக்கும் தாய்நாட்டிற்கும் பணி செய்த கலைஞர்

2018-08-08


கலைஞரின் இலக்கிய பயணம்

கலைஞர் தமது இலக்கிய பயணத்தை தமது 14-ஆம் வயதில் 1938-ஆம் ஆண்டு தொடங்கினார்.


இவரது முதல் போராட்டம்  1938-ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போரில், ஆரம்பமானது. தம்மை ஒத்த மாணவர்களை திரட்டி திருவாரூரில் தினந்தோறும் ஊர்வலம் நடத்திய போது அந்த ஊர்வலத்தில் செல்வோர் பாடுவதற்காக ,


வாருங்கள் எல்லோரும் போருக்கு சென்றிடுவோம்......  வந்திருக்கும் இந்திப் பேயை விரட்டி திருப்பிடுவோம்.....   என்ற பாடலை எழுதினார்.


அப்போது தொடங்கியது அவரது எழுத்துப்பணி. அதே ஆண்டில் அவர் தொடங்கிய மாணவ நேசன் எட்டு பக்கங்களை கொண்ட மாதந்த சஞ்சிகையாக வெளி வந்தது.  அடுத்து தொடங்கிய முரசொலி துண்டு வெளியீடாக வந்தது. அதில் சேரன் என்ற பெயரில் தமது தமிழ் பணியை தொடர்ந்தார் கலைஞர்.


இளமைப்பலி என்ற கலைஞரின் வசீகர  கட்டுரைதான் இறுதி வரை அவரையும் அண்ணாவையும் இணைத்தது.
பின்னர் பெரியாரின் குடியரசு இதழில் துணை ஆசிரியர் பணி. அங்கும் தமது எழுத்தால் பெரியாரின் பாராட்டை பெற்றார். குடியரசு ஏட்டில் கலைஞர் எழுதிய அண்ணாமலைக்கு அரோகரா என்ற கட்டுரை, தீட்டாயிடுது.. என்ற துணை தலையங்கம் ஆகியவை பெரியாரால் பெரும் பாராட்டை பெற்றவை. 
கலைஞரின் முதல் புத்தகம் கிழவன் கனவு. கலைஞரின் முதல் நாடகம் பழனியப்பன். அதுவே பின்னர் நச்சுக்கோப்பை என்ற பெயரிலும் அரங்கேறியது.


கலைஞர் என்ற பெயரை பெற்றுக்கொடுத்த மேடை நாடகம் 
1947-ஆம் ஆண்டு தஞ்சையில் அரங்கேறிய தூக்கு மேடை நாடகம் நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நெஞ்சை கவர்ந்தது. அவரே கருணாநிதிக்கு கலைஞர் என்ற பெயரை சூட்டினார். அது முதல் தமிழகத்தில் கலைஞர் என்றாலே அது கருணாநிதிதான் என்றானது.
•சிலப்பதிகாரம்
•மணிமகுடம்
•ஒரே முத்தம்
•பழனியப்பன்
•தூக்கு மேடை
•காகிதப்பூ
•நானே அறிவாளி
•வெள்ளிக்கிழமை
•உதயசூரியன்
•நச்சுக் கோப்பை
திருவாளர் தேசியம் பிள்ளை
அனார்கலி
சேரன் செங்குட்டுவன்
சாம்ரான் அசோகன்
பரதாயாணம்
பரபிரம்மம் 
ஆகியவை கலைஞரின் கைவண்ணத்தில் உருவான நாடகங்கள்.

இதே மூட நம்பிக்கை ஒழிப்பு, சாதி ஒழிப்பு, மொழிப்பற்று ஆகியவற்றை வலியுறுத்தி முதல் முதலாக புதையல் என்ற தொடர்கதையாக முரசொலி வார இதழில் கலைஞர்  எழுதினார். இவ் கதை 1960-ல் நூல் வடிவம் பெற்றது. 

இதே போன்று ஒரே ரத்தம், ரோமபுரி பாண்டியன், தென் பாண்டிச்சிங்கம், பொன்னர் சங்கர், பாயும் புலி பண்டாரக வன்னியன், வெள்ளிக்கிழமை, சுருளிமலை, வான்கோழி, ஒரு மரம் பூத்தது ஆகியவை கலைஞரின் மிகச்சிறந்த புதினங்கள்.
நளாயினி, பழக்கூடை, பதினாறு கதையினிலே உள்ளிட்ட பல நூறு சிறுகதைகளும் கருணாநிதியின் கைவண்ணத்தில் பூத்துள்ளன.

இதே போன்று 
•குறளோவியம்
•தொல்காப்பிய உரை
•சங்கத் தமிழ்
•இனியவை இருபது
•திருக்குறள் உரை - என இலக்கிய படைப்புகளையும் தமிழுக்கு தந்து சென்று உள்ளார் கலைஞர்.
காவியப்படைப்பு.


 திருக்குறளுக்கு இலக்கிய வரிகளால் ஓவியம் தீட்டி, அதனை பாமர மக்கள் மனதிலும் பதிய செய்ததுடன்  சங்கதமிழ் இலக்கிய கவிதைகளுக்கு கதை வடிவம் கொடுத்து, அதனை நாட்டிய நாடகமாக்கும் அளவுக்கு மேம்படுத்தியவர் கலைஞர். அவரது தொல்காப்பிய பூங்கா மற்றொரு புகழ் பெற்ற காவியப்படைப்பு.
தமது 92 வது வயதிலும் ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும், தொலைகாட்சி நெடுந்தொடருக்கான கதை வசனத்தை எழுதியவர் கலைஞர்.


இது தவிர கலைஞரின் படைப்புகள், கடிதங்கள், கட்டுரைகள் என 108 நூல்கள் வெளிவந்துள்ளன. இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல, அவர் உடன்பிறப்புகளுக்காக எழுதிய ஆயிரக்கணக்கான கடிதங்களும் அவரின் இலக்கிய ஆற்றலுக்கான சான்றுகள்.

திரையினூடாக தமிழ் வளர்த்த கலைஞர் 


தழிழ் புலவர்களை நேரில் கண்டிராத எமக்குச் சங்ககால இலக்கியங்களைத் திரையினூடாக கண்முன் தோன்ற செய்தவர் கலைஞர். இவரின் ஒவ்வொரு வசனமும் பார்ப்பவரை சங்ககாலத்திற்கு கூட்டிச்சென்றது என்றால் மிகையாகாது. 
தமிழையும், தமிழர்களையும் இவரை விட சிறப்பாக கையாண்டவர்கள் எவரும் இல்லை. அவரது உரை ஒவ்வொன்றும் தமிழுக்கு பெருமை சூட்டுகின்றதாக உள்ளது. 
தமிழ் திரை உலகில் வசனகர்த்தாவுக்கு என்று அறிமுக காட்சி வைக்கப்பட்டது இன்றுவரை இவருக்கு மட்டுமே..! 
தமது அனைத்துப் பணிகளும் ஓய்த போதும் தமிழுக்கு ஓயாது பணிசெய்த பெருமை கலைஞரையே சேரும் 
வாள்வீச்சுக்கு இணையான இவரது தமிழ்உரைவீச்சை மறக்கமுடியுமா ? தமிழ் இருக்கும் வரை இவரது தமிழ் பேச்சு என்றென்றும் தமிழரின் உள்ளத்திலும் வரலாற்றிலும் நிலைத்திருக்கும். 


இவரின் திரையுலக சாதனைகள்


1947-ல் அவர் முதல் முதலாக வசனம் எழுதிய ராஜகுமாரி திரைப்படம் திரைக்கு வந்தது. எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த முதல் படமும் இதுதான்.


1948ல் கருணாநிதியின் கைவண்ணத்தில் திரைக்கு வந்தது காவிய கதை அபிமன்யு.


1949 ஆம் ஆண்டில்  சேலம் மார்டன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் மாதம் 500 ரூபாய் ஊதியத்தில் பணியில் அமர்ந்தார் கருணாநிதி


1949-ல் அவரது கதை வசனத்தில் மந்திரிகுமாரி திரைப்படம் வெளியானது.


1952-ஆம் ஆண்டு வெளிவந்த பராசக்தி, தமிழ் திரையுலகை புரட்டிப் போட்டது. பெரும் சரித்திரம் படைத்த அந்த காவியம் கருணாநிதியின் புகழ் மகுடத்தில் ஒரு மாணிக்கமாக மாறியது.
1952 -ஆம் ஆண்டில் கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதிய பணம் திரைப்படம் வெளியானது. 


1953 ஆம் ஆண்டு திரும்பி பார், 1954 ஆம் ஆண்டு மனோகரா, அம்மையப்பன் ஆகிய படங்களும் , அவர் வசனம் எழுதிய மலைக்கள்ளன் படமும் திரைக்கு வந்தது.


1956 -ஆம் ஆண்டு வெளி வந்த  ராஜா ராணி திரைப்படமும் கருணாநிதியின் கதை வசனத்தில் உருவானது தான்.


1957 ஆம் ஆண்டில் கருணாநிதியின் கதை வசனத்தில் எம்.ஜி.ஆரின் நடிப்பில் வெளியான புதுமை பித்தன் மற்றொரு மாபெரும் வெற்றிபடமானது.


1960 -ல் எல்லோரும் இந்நாட்டு மன்னர், 1963-ல் காஞ்சித் தலைவன், 1964-ல் பூம்புகார் என வரிசையாக திரைப்படங்களில் தனது முத்திரையை பதித்தார் கருணாநிதி. 
பின்னர் வண்டிக்காரன் மகன், கண்ணம்மா, காதல் பதில் சொல்லும், பாலைவன ரோஜாக்கள், நீதிக்கு தண்டனை, பாசப்பறவைகள், பாடாத தேனீக்கள், மண்ணின் மைந்தன், புதிய பராசக்தி, பாலைவன பூக்கள், இளைஞர், உளியின் ஓசை என பல்வேறு படங்களில் தனது கை வண்ணத்தை காட்டியவர் கருணாநிதி.

கட்டிட கலையில் கலைஞரின் பணி
தமிழரின் கலைப்படைப்புகளை உலகேமே வியந்து பார்க்கும் இடமாக இந்தியா விளங்குகின்றது. சோழர்களுக்கும் முகலாய பேரரசர்களுக்கும் பின்பும் இந்தியாவின் கட்டிட கலைப்பயணம் தொடர்ந்தது என்றால் அது கலைஞரின் படைப்புக்கள் மட்டுமே


பல மக்கள் தலைவர்களுக்கு நினைவாலயங்களையும் வள்ளுவர் கோட்டம், வள்ளுவர் சிலை, சிவாஜி சிலை போன்றன கலைஞரின் கட்டிடக் கலைக்கு என்றென்றும் சான்று பகரும் சரித்திர சின்னங்களாகும்.  


 1976-ம் ஆண்டு தான் முதல்வராக இருந்தபோது, நுங்கம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டத்திற்கு அடிக்கல் நாட்டியதை தொடர்ந்து கம்பீரமாக எழுந்து நின்ற வள்ளுவர் கோட்டம் ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதுதான் திறந்து வைக்கப்பட்டது. 


14 வயதில் கையில் ஏந்திய பேனாவை 93 வயது வரை கீழே இறக்காமல் எழுதிய ஒரே தலைவரும் அவர்தான். இவரின் வாழ்க்கை ஒவ்வொருவரும் அறிய வேண்டிய சரித்திரம்,   நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் அவர் எழுதிய தமது வாழ்க்கை சுய வரலாறு தமிழகத்து வரலாற்றின் மற்றொரு அம்சமாக மாறி உள்ளது.