You are here : Arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




கதை கூறும் நமது ஊர்களின் பெயர்கள் - ஊர்காவற்றுறை

2018-08-23


இலங்கையின் வட மாகாணத்தில் பண்டைய சிறப்புமிக்க துறைமுகமாக விளங்கியது ஊர்காவற்றுறையாகும். லைடன் தீவு என ஒல்லாந்தரால் அழைக்கப்பட்ட இத்தீவின் வடமேற்கில் ஊர்காவற்றுறை அமைந்துள்ளது. லைடன் தீவு வேலணைத் தீவு எனவும் அழைக்கப்படுகிறது. நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் வரலாற்றுக் குறிப்பொன்று இதை தணதீவு எனக் குறிப்பிடுகிறது. கிறீஸ்துவுக்கு முன் ஆறாம் நூற்றாண்டிலிருந்தே ஊர்காவற்றுறை துறைமுகமாக இருந்தது எனச் சரித்திர ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பராக்கிரமபாகு மன்னன் காலத்தில் இது துறைமுகமாக இருந்தது என வரலாறு சான்றுபகருகிறது. போத்துக்கேயர் இலங்கைக்கு வருவதற்கு முன் தென் இலங்கை அரசனான ஆறாம் பராக்கிரமபாகு யாழ்ப்பாண அரசை வெற்றிகொண்டு ஊர்காவற்றுறை துறைமுகத்தில் ஆதிக்கஞ் செலுத்தியதாகக் கூறப்படுகிறது. காலகதியில் அது ஒரு துறைமுக நகரமாக உருவெடுத்தது.

ஊரின் பெயர் எப்படி உருவாகியது

ஊர்காவற்றுறை என்ற பெயர் வரக் காரணம் என்ன என்று ஆராயின் ஊரைக் காவல் செய்கின்ற வகையில் இந்த துறைமுகம் அமைந்திருந்தமையால் அவ்வாறு பெயர் வந்தது என்பர். ஊரான் தோட்டம் என முன்பு வழக்கில் இருந்த பெயர் சிங்களத்தில் “ஊறாதொட்ட” என வந்தது என்பர். பன்றிகள் ஏற்றிய துறை என்ற காரணத்தால் ஊறாதொட்ட எனப் பெயர் வந்தது என்று சொல்பவருமுளர். ஆனால் யானைகள் இத்துறைகமுகத்தினூடாக ஏற்றுமதி செய்யப்பட்டது என்பதற்குச் சான்றுகள் உள. இப்பொழுது ஆங்கிலத்தில்   கயிற்ஸ் என வழங்கப்படும் பெயர் ஆங்கிலேயரால் சூட்டப்பட்டது என்பர். ஆய்வுகளின்படி இது போர்த்துக்கேய சொல்லில் இருந்து மருவி வந்தது எனத் தெரிகிறது. போர்த்துக்கேய மொழியில் கேயிஸ் என்றால் துறைமுகம் என்பது பொருள். அதிலிருந்தே பின் கயிற்ஸ்  என்ற பதம் ஆங்கிலத்தில் மாற்றி அமைக்கப்பட்டிருக்கலாம் என்று விளக்கம் தரப்படுகிறது.