2018-09-03
கடந்த 28வருடங்களாக மெல்பேர்னில் தமிழ் மக்களுக்கும் கலை, கலாசார நிகழ்ச்சிகளை வழங்கி வரும் விக்டோரிய தமிழ் கலாசார கழகத்தினரால் கடந்த வாரம் முத்தமிழ் கலைவிழா 2018, றோவில் உயர்கல்லூரி கலை அரங்கில், மண்டபம் நிறைந்த ரசிகர்கள் மத்தியில் சிறப்பாக நடைபெற்றது.
குறிப்பாக விக்டோரியா மாநிலத்தில் உள்ள பரதநாட்டிய ஆச்சாரிய அவுஸ்திரேலிய அமைப்பின் (BAAVA) ஆசிரியைகள் இணைந்து நடன நிகழ்ச்சிகளை வழங்கி சபையோரின் கரகோஷங்களைப் பெற்று பாராட்டப்பட்டனர். குறிப்பாக ஒரே மேடையில் மெல்பேர்னில் முன்னணி வகிக்கும் BAAVA அமைப்பு, அதன் உறுப்பினர்களான நிர்வாகிகள், நடனாலய இந்திய நடனக்கல்லூரி இயக்குநர் திருமதி மீனா இளங்குமரன், ஸ்ரீமதி ரேணுகா ஆறுமுகசாமியின் நெறியாள்கையில் கலாஞ்சலி நடன கல்லூரி ஸ்ரீமதி உஷாந்தினி ஸ்ரீபத்மநாதனின் நாட்டியாலய பரதநாட்டிய கல்லூரி மற்றும் மெல்பேர்னின் மூத்த நடனக்கல்லூரியான நிர்க்த ஷேத்திர நடனக்கல்லூரியின் இயக்குநர் திருமதி சாந்தி இராஜேந்திரனின் நெறியாள்கையில் கண்கவர் நடனங்களை வழங்கி விழாவை சிறப்பித்தனர்.
விஷேட நிகழ்ச்சியாக MELBOURNE TALKIES நாடகக் குழுவின் நகைச்சுவை நாடகங்கள் மேடையேற்றப்பட்டன. விக்டோரிய தமிழ் கலாசார கழகம், தேசிய இன, மத வேறுபாடுகளை தவிர்த்து கலை, கலாசாரம் மொழி என்பவற்றை சமூகத்திற்கு புகட்டுவதிலும் பேணுவதிலும் உறுதியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
வருடந்தோறும் நடைபெற்று வரும் முத்தமிழ் கலை விழாவில் மொழி, கலை, கலாசாரம் இவற்றிற்காகவும், தமிழ் சமூகத்திற்காகவும் பங்களிப்புகளை வழங்கி வரும் கலைஞர்களை தெரிவுசெய்து "கலாவித்தகர்" எனும் விருதை வழங்கி கௌரவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் "கலாவித்தகர்" விருது 2016 திருமதி சாந்தி இராஜேந்திரனுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவர் மெல்பேர்னில் மூன்று தசாப்தங்களாக நிர்க்த ஷேத்திர நடனக்கல்லூரியை நடத்தி 60க்கும் மேற்பட்ட பரதநாட்டிய அரங்கேற்றங்களை வெற்றிகரமாக நிறைவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2017 ஆம் ஆண்டுக்கான ”கலாவித்தகர்" விருது மெல்பேர்னில் 1988ஆம் ஆண்டு முதல் கலாஞ்சலி நடனக்கல்லூரியை நிறுவி, இங்கு பிறந்த மற்றும் குடியேற்ற வாசிகளாக இங்கு வாழும் இளம் சமூகத்திற்கு பரதநாட்டியத்தை பயிற்சி அளித்துவரும் திருமதி ரேணுகா ஆறுமுகசாமிக்கு வழங்கப்பட்டது.
இவ்வருட "கலாவித்தகர்" விசேட விருது கடந்த 29வருடங்களாக மெல்பேர்னில் மிருதங்க வகுப்புகளை நடத்தி வரும் தமிழ் மொழி, கலை, கலாசாரத்திற்கு தனது பங்களிப்பை வழங்கி பல்லின கலாசார சபையின் விருதை பெற்றவரும் மெல்பேர்னில் ஏராளமான இளைஞர்களின் மிருதங்க அரங்கேற்றத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தவருமான பாலஸ்ரீ இராசையாவிற்கு வழங்கப்பட்டு பல்லின கலாசார ஆணையகத்தின் ஆணையாளர் சிதம்பரம் ஸ்ரீனிவாசனால் கௌரவிக்கப்பட்டார்.
விக்டோரிய தமிழ் கலாசார கழகத்தின் தலைவர் பிரகாஷ் மனோகரன் தனது தலைமை உரையில் கடந்த 28ஆண்டுகள் கழகத்தின் செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் தொடர்ந்து நடைபெற இருக்கும் நிகழ்வுகள் பற்றி விளக்கமளித்ததுடன் இளைய சமூகத்தை கழகத்துடன் இணைந்து செயல்பட முன் வருமாறு அழைப்பும் விடுத்தார்.
முன்னாள் தலைவரும் தற்போதைய பொதுச் செயலாளருமான குகதாஸ் நவநீதராஜா தனது நன்றியுரையில் இந்த விழாவில் கடந்த மூன்று வருடங்களாக "கலாவித்தகர்" எனும் விஷேட விருது வழங்கும் நிகழ்வு பற்றி விரிவாக விளக்கினார்.
நிகழ்வில் மிருதங்க வித்துவான் பாலஸ்ரீ இராசையா மற்றும் உத்திராதேவி விக்கிரமசிங்கம் மங்கள விளக்கேற்றுவதை யும், மயூரி, கீர்த்தனா தர்மகுலசிங்கம் சகோதரிகள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதையும், முரளிக்குமாரின் நெறியாள்கையில் இராகசுதா இசைக் கல்லூரி மாணவர்களின் வயலின் இசையையும், விக்டோரிய தமிழ்க் கலாசார கழகத்தின் தலைவர் பிரகாஷ் மனோகரன் தலைமை உரை வழங்குவதை யும் மெல்பேர்ன் நடன ஆசிரியைகளின் (ஆச்சாரிய அமைப்பு BAAVA) நடன நிகழ்வையும் நடனாலயா, கலாஞ்சலி , நாட்டியாலயா , நிர்க்த்த ஷேத்ரா நடனக்கல்லூரி மாணவிகளின் நடனத்தையும் பிரபல மிருதங்க மேதை இராசையா பாலஸ்ரீக்கு தமிழ் கலாசார கழகத்தின் 2018 ஆம் ஆண்டுக்கான கலாவித்தகர் விருதை பல்லின சமூக கலாசார ஆணையாளர் சிதம்பரம் ஸ்ரீனிவாசன் வழங்கிக் கௌரவிப்பதையும் கழகத்தின் முன்னாள் தலைவரும், தற்போதைய பொதுச் செயலாளருமான குகதாஸ் நவநீதராஜா நன்றி உரை வழங்குவதையும் படங்களில் காணலாம்
கலாநிதி சிவா தயாபரன்,
மெல்பேர்ன்