You are here : Arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




பிழையின்றி தமிழ் எழுதுவோம் - வலிமிகுதல் உலகில் தமிழுக்கு மட்டுமே உரிய மொழிப்பண்பு

2018-11-05


நன்கு படித்தவர், ஓரளவு படித்தவர், எழுத்தாளர், படிப்பாளர், ஆசிரியர், மாணவர் என எல்லாருமே தவறிழைக்கின்ற இடம் ஒன்றுண்டு. இரு சொற்களுக்கிடையே வலிமிகுவிப்பதில் நேரும் ஒற்றுப் பிழை. ஒற்று என்பது மெய்யெழுத்தைக் குறிக்கும். இரு சொற்களுக்கிடையே ஒற்றெழுத்து இடுவதில் நேரும் பிழை. 
சந்திப்பிழை என்பதும் அதுவே. இரண்டு சொற்கள் சந்திக்க நேரும்போது செய்கின்ற பிழை. சந்தி வடமொழி என்பதால் சந்திப்பிழை என்று கூறாமல் ஒற்றுப்பிழை என்பர். வலிமிகுதல், வலிமிகாமை என்றும் கூறுவர். வல்லின மெய்யெழுத்தினைத்தான் வலி என்கின்றனர். 


க், ச், ட், த், ப், ற் ஆகிய ஆறும் வல்லின மெய்யெழுத்துகள். க, ச, ட, த, ப, ற எழுத்து வரிசைகள் வல்லின உயிர்மெய்யெழுத்துகள். கண், காது, சக்கை, சிவப்பு, தமிழ், தாத்தா, தெற்கு, பறவை, பாட்டு, புகழ் போன்ற சொற்கள் வல்லின உயிர்மெய்யில் தொடங்கும் சொற்கள். 


ஒற்றுப் பிழை எங்கே வரும்..?
இரண்டு சொற்கள் சேரும்போது வரும். சொற்களுக்குள்ளேயே சொல்லுருபுகள் சேரும்போதும் வரும். ஒற்று தோன்றவேண்டிய இடங்களில் தோன்றாமல் இருப்பது பிழை. ஒற்று தோன்றக்கூடாத இடங்களில் தோன்றுவதும் பிழை. ‘அப்படிச் செய்’ என்னும்போது இரு சொற்களுக்கிடையே ச் என்னும் ஒற்று தோன்றுகிறது. இது சரியானது. “அப்படி செய்” என்று எழுதினால் பிழை. ‘வாழ்த்துக்கள்’ என்னும்போது வாழ்த்து என்னும் பகுதிக்கும் கள் என்னும் பன்மை விகுதிக்கும் இடையில் க் தோன்றுகிறது. இது பிழையானது. ”வாழ்த்துகள்” என்று எழுதுவது சரி. 


வலிமிகுதலை சரி செய்வது எவ்வாறு?
வலிமிகுதல் என்றால் வல்லின மெய் மிகுவது. வல்லின மெய்கள் க், ச், ட், த், ப், ற் என்று தெரியும். கசடதபற என்னும் வரிசை எழுத்துகள் வல்லின உயிர்மெய்கள். ஒரு சொல்லுக்கு அடுத்து வரும் சொல் வல்லினத்தின் தொடங்கினால், அங்கே வலிமிகுமா மிகாதா என்று பார்க்க வேண்டும். பதினெட்டு உயிர்மெய்களில், ஆறு உயிர்மெய்களில் தொடங்கும் சொற்களைப் பார்த்தால் போதும். இதனை மேலும் சுருக்கப்போகிறோம். 


ககர வரிசை எழுத்துகள் சொல்லுக்கு முதலெழுத்து ஆகும். கல்வி, காற்று, கிணறு, கீரி, குன்று, கூரை, கேள்வி, கை, கொலை, கோன் என்று ககர வரிசை எழுத்துகள் சொல்லுக்கு முதல் எழுத்தாகின்றன. அவ்வாறே சகர, தகர, பகர வரிசை எழுத்துகளும் சொல்லுக்கு முதலாகும். டகர, றகர வரிசை எழுத்துகளில் ஒரு சொல் தொடங்குவதில்லை. டக்கர், டாடி, டுமீல், டூப்பு என்று எழுதுவது தமிழில்லை. இப்போது பாருங்கள், கசடதபற என்னும் ஆறு வரிசை எழுத்துகளில் கசதப என்னும் நான்கு வரிசை எழுத்துகள் மட்டுமே சொல்லுக்கு முதலெழுத்தாகும். 


இப்பொழுது வழக்கு எளிதாகிவிட்டது. ஒரு சொல்லுக்கு அடுத்து வரும் சொல் கசதப வரிசை எழுத்துகளில் தொடங்கினால் அங்கே வலிமிகுவிக்க வேண்டுமா, வேண்டாவா என்று பார்க்க வேண்டும். பல இடங்களில் மிகுவிக்க வேண்டும். பல இடங்களில் மிகுவிக்கக் கூடாது. அதனை அறிவதற்கான வழிமுறைகள் மிகவும் எளியவை. அவற்றை ஒவ்வொன்றாகக் அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.
- கவிஞர் மகுடேசுவரன்