You are here : Arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




பரதநாட்டிய ஆசிரியர் ரவிச்சந்திரனுடனான நேர்காணல்

2019-02-10


நாட்டிய உலகில் வழக்கொழிந்த நிலையில் இருந்த சுத்த நிர்த்யம் மற்றும் பட்டஜ நாட்டியத்தை தனது குருவின் மூலம் கற்று அதனை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச்சென்றவர். 12 வயதுடையவர்களுக்கு நாட்டியம் கற்பிப்பதற்கும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாட்டியம் கற்பிப்பதிலும் நுட்பமான வேறுபாட்டை உணர்ந்து கற்பிப்பவர். மெலட்டூர் பாணியை வளர்த்தெடுப் பவதில் தன்னிகரற்றவர். கடந்த 25 ஆண்டுகளாக தமிழ்மொழியில் அமைந்த பாடல்களுக்கு நாட்டியம் அமைத்து அதனை மட்டுமே கற்பித்து வருபவர்... இப்படி பல சாதனைகளை செய்து பாரம்பரிய கலையான பரதநாட்டியத்தைவளர்த்தெடுப்பதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் பரதநாட்டிய ஆசிரியர் ரவிச்சந்திரனுடனான நேர்காணல்


உங்களைப் பற்றி..?
நாட்டிய குரு மாங்குடி துரைராஜ் ஐயாவின் நேரடி சிஷ்யர்களான நாட்டியக் கலைஞர் எம். சுந்தரம் ஐயா மற்றும் பல்கலை வித்தகர் ஏ.பி. ஹரிதாஸ் ஆகியோரிடம் பரதநாட்டியத்தையும் நட்டுவாங்கத்தையும் கற்றேன். குருவின் ஆசியாலும் கடவுளின் கொடையுள்ளத்தாலும் எனக்கு அளிக்கப்பட்ட இந்த நாட்டியக் கலையை இன்று வரை அர்ப்பணிப்பு உணர்வுடனும் எதிர்கால தலைமுறையினருக்கு அதன் பாரம்பரியமும் தொன்மையும் மாறாமல் கற்பிக் கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்றும் செயற்பட்டு வருகிறேன்.


உங்களுடைய குருவிடமிருந்து கற்றுக் கொண்டது என்ன? 
குருகுல வாச முறையில் கற்றுக்கொண்டதால், கலையுடன் நல்லொழுக்கங்களையும் கற்றுக் கொண்டேன். குருவானவர் "தாயினும் சாலப் பரிந்து.." என்பர். அதனை எனது குருகுலவா
சத்தில் அனுபவத்தில் கண்டேன். ஒரு முறை குரு குலவாசத்தில் இருக்கும் போது எனக்கு எதிர்
பாராமல் விபத்து ஏற்பட்டு கையில் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது எனது குருவான
வர் செய்த செயல்களை விவரிக்க வார்த்தைகளே யில்லை. இதனை எனது மாணவர்களுக்கு உணர்ந்து போதிக்கிறேன். அவர்களுக்கு துணையாக இருக்கிறேன். எனக்கு நாட்டியம் என்னும் அட்சய பாத்தி ரத்தை வரமாக அளித்த குருவை நினைக்காத நாளில்லை.


தமிழ்ப் பாடல்களுக்கு நாட்டியம் அமைப்பதை இலக்காகவும் கட்டணமின்றி கற்பிப்பதையும் பின்பற்றி வருகிறீர்களே... இதன் பின்னணி யாது?
பணக்காரர்களின் கலை என்றும் அதிக செலவாகும் என்றும் பரதநாட்டியத்தைப் பற்றி பொதுவான கருத்து ஒன்று இன்றும் இருக்கிறது. அத்துடன் இக்கலையை ஆர்வமுடன் கற்கத் தொடங்கிய ஏராளமான கலைஞர்கள் பொருளாதாரத்தின் காரணமாகவே இடையில் தங்களது பயணத்தை நிறுத்தி
யிருக்கிறார்கள். இதனை எனது அனுபவத்தில் கண்டிருக்கிறேன். எனது குருவும் ஆர்வத்துடன் இருப்பவர்களுக்கு இலவசமாகக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவார். அதனாலேயே அதனை நான் பின்பற்றுகிறேன். அத்துடன் எனக்கு தமிழ் மொழி மீது பற்று அதிகம். கவிதைகளையும் எழுதும் ஆற்றல் உண்டு என்பதால் நான் தமிழில் மட்டும் கற்பிக்க வேண்டும். நாட்டியம் அமைக்க வேண்டும் என்று எனக்குள் உறுதி எடுத்துக் கொண்டு கடந்த 25 ஆண்டு காலமாக தமிழில் மட்டும் பரதநாட்டியத்தைக் கற்பித்து வருகிறேன். அதற்காக நான் பிற மொழிகளை எதிர்ப்பவன் அல்ல. தற்போது தமிழகத்தைக் கடந்து வேறு மாநிலங்களில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினால் அங்குள்ள மொழியில் நாட்டியம் அமைத்து அரங்கேற்றுவேன். அத்துடன் தமிழ் மொழியின் வளத்தை அறியச்செய்யவும் நாட்டியத்துறையில் உள்ளவர்களுக்கு ஊக்கமளிக்கவும் ஏராளமான பாடல்களையும் எழுதி நாட்டியம் அமைத்திருக்கிறேன்.


மெலட்டூர் பாணியின் தனித்துவம் என்ன?

தஞ்சை நால்வர் பாணியிலிருந்து பந்தநல்லூர் பாணி உருவானது. தஞ்சாவூருக்கு அருகேயிருக்கும் மெலட்டூரில் நாட்டிய நாடகம் அரங்கேறும் போது  பெண் கதாபாத்திர ங்களுக்கு ஆண் கலைஞர்களே பெண் வேடமிட்டு மேடையில் தோன்றுவார்கள். இந்த நடை முறை பல ஆண்டுகளாக நீடித்ததால் மக்களின் புரிதலுக் காக மெலட்டூர் பாணி என்று அடையாளமிடப்பட்டது. அத்து டன் பரதநாட்டியத்தில் சில நுட்பமான உத்திகளை உட்புகுத்தி அதனை மேம்படுத்தினார்கள். உதாரணத்துக்கு அலாரிப்பின் போது பின்னணியில் தத்த கரம் ஒலிக்கும். பின்னர் திருப்புகழ் ஒலிக்கப்பட்டது. இது அழகியலுக்காக பயன்படுத்தப்பட்டது. ஆனால் மெலட்டூர் பாணியில் இதன்போது பின்னணிக்காக மட்டுமே ஒலிக்கப்பட்ட திருப்புகழையும் நாட்டியத்துடன் இணைக்கும் வகையில் சொற்கட்டுகளுடன் பாடல்களை எழுதி, பக்திச் சுவையை மேம்படுத்தினர். இப்படிப் பல தனித்துவமிக்க அடையாளங்களைப் பட்டியலிடலாம்.


பரதநாட்டியத்தில் முன்பிருந்த தோடையமங்களம்,மல்லாரி போன்றவை வழக்கிலிருந்து ஒழிந்து போனதேன்? 
இவ்விரண்டு மட்டுமல்ல. இன்னும் ஏராளமான விடயங்கள் வழக்கிலிருந்து காணாமல் போயிருக்கின்றன. இதற்கு மாறிவிட்ட நவீன உலகமும் ஒரு காரணம். மல்லாரியில் தீர்த்த மல்லாரி, புறப்பாடு மல்லாரி, வீதியுலா மல்லாரி, அமர்ந்து அருள்பாலிப்பதற்கு ஒரு மல்லாரி என ஏராளமான மல்லாரிகளை குருமார்கள் எனக்குக் கற்பித்தார்கள். ஒவ்வொரு மல்லாரிக்கும் ஒரு நடையை மாற்றி தாளலயத்துடன் வாசிப்பார் கள். திண்மையான தோள்களையுடைய மல்லர்கள், ஆர்ப்பரித்து ஆடிவருவது தான் பின்னாளில் மல்லாரி என்று மாற்றம் பெற்றதாக குருவானவர்கள் எனக்குக் கற்பித்திருக்கிறார்கள். எட்டுத் திசைகளுக்கும் அதன் தேவதைகளுக்கும் வணக்கம் செலுத்துவது தான் தோடையமங்களம்.இதுவும் வழக்கத்திலிருந்து ஒழிந்துவிட்டது. தற்போதைய இளங்கலைஞர்களுக்கு எட்டுத் திசைகளைப் குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும் துல்லியமாகத் தெரிவதில்லை. தெரிந்து கொள்வதிலும் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் நாங்கள் எங்களுடைய மாணவர்களுக்கு இதைப் பற்றிய தகவல்களையும் கற்பிக்கிறோம்.


மறக்கமுடியாத சம்பவம் ஏதாவது உள்ளதா..?
15 வயதிலேயே அதாவது 1976 ஆம் ஆண்டில் அப்போதைய இந்திய ஜனாதிபதி பக்ரூதீன் அலி முஹமதுவின் கையால் விருது பெற்றமை மறக்க முடியாததாகும்.


தங்களின் எதிர்கால இலக்கு என்ன..?
வளரும் நாட்டிய ஆசிரியக் கலைஞர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களுக்கு தேவையான அனைத்து விடயங்களையும் இலவசமாகக் கற்பிக்
கத் தயாராக இருக்கிறேன். அதற்கு பதிலாக ஒவ்வொரு ஆண்டும் ஒரு சில ஏழை மாணவர்களுக்கு இக் கலையை இலவசமாகக் கற்பிக்கிறோம் என்ற வாக்குறுதியை எனக்கு அவர்கள் அளிக்க வேண்டும்.


சந்திப்பு: ஆர்.ஜி.