You are here : Arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




பிழையின்றி தமிழ் எழுதுவோம் - எழுவாய்த் தொடருக்கு வலிமிகாது

2019-02-11


நன்றாக நினைவிற்கொள்ளுங்கள், ஒரு பெயரும் வினையும் அடுத்தடுத்த வந்தால் அது எழுவாய்த் தொடர் ஆகும். எழுவாய்த் தொடருக்கு வலிமிகுவிக்கக் கூடாது. குழந்தைச் சிரித்தது, வள்ளிச் சிரித்தாள் என்று எழுதினால் அது பிழை.

ஒரு தொடரை எப்படி வகைப்படுத்துகிறார்கள் என்று பார்ப்போம். தொடர் தொடர் என்கிறேனே… ஏதேனும் கடினமான இலக்கணப் பகுதிக்குள் நுழையப் போகிறேனோ என்று சிறிதும் அஞ்ச வேண்டா. 

மிதிவண்டியை எடுத்துக்கொள்ளுங்கள், அதன் ஒவ்வோர் உறுப்புக்கும் ஒரு பெயர் இருப்பதைப்போல, இலக்கணம் எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அப்பெயரோடு நமக்கு அறியாமை எஞ்சியிருப்பதால் சற்றே மிரட்சியாக இருக்கக்கூடும். அப்பெயர் இதனைக் குறிக்கிறது என்று அறிந்த நொடியில் “அடடே… இதுதானா… இவ்வளவுதானா ?” என்றுதான் தோன்றும். அதனால் தொடர் என்ற சொல்லைக் குறித்து மிகையான அச்சம் கொள்ளாதீர்கள். 

இரண்டு சொற்கள் சேர்ந்து வந்தால் அது சொற்றொடர், சுருக்கமாகச் சொன்னால் தொடர் என்று முன்பே சொன்னேன். அவ்விரண்டு சொற்களும் என்னென்ன வகைச் சொற்கள் என்பதைப் பொறுத்து தொடர்களை வகைப்பாடு செய்திருக்கிறார்கள். 

சொற்களின் அடிப்படை வகைமைகள் என்னென்ன ? பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்பவையே. இவற்றில் பெயர்ச்சொற்களும் வினைச்சொற்களும் அடிக்கடி வருகின்றன. இடைச்சொற்கள் அங்கங்கே வரும். உரிச்சொற்கள் அரிதாகத்தான் வரும். 

ஒரு பெயரைச் சொல்லி ஒரு வினையைச் சொல்வதுதான் ஒரு கருத்தினைக் கூறுவதற்கு அடிப்படை. 
ஒரு பறவை இருந்தது, அது பறக்கிறது. 
ஒரு குழந்தை இருக்கிறது, அது சிரிக்கிறது. 
வள்ளி என்பவள் இருக்கிறாள், அவள் சிரிக்கிறாள் அழுகிறாள் நடக்கிறாள் ஓடுகிறாள். 
இப்படி எவற்றையேனும் ஒரு கருத்தாக வெளிப்படுத்துவோம். 

இப்பொழுது நேராகவே தொடர்களின் பிரிவுகளுக்கு அழைத்துச் செல்கிறேன். 
ஒரு பெயர்ச்சொல். அதனை அடுத்து ஒரு வினைச்சொல். இரண்டும் சேர்ந்து வந்தால் அதன் பெயர் ‘எழுவாய்த் தொடர்’. பெயர்ச்சொற்களை எழுவாய் என்றும் வினைச்சொற்களைப் பயனிலை என்றும் நாம் அறிவோம். எழுவாயை அடிப்படையாகக்கொண்டு அத்தொடர் தொடங்குவதால் எழுவாய்த் தொடர் என்று கூறுகிறோம். 

பறவை பறக்கிறது 
குழந்தை சிரித்தது 
வள்ளி சிரித்தாள் 

மேற்கண்ட தொடர்களைப் பாருங்கள், முதலில் ஒரு பெயர்ச்சொல் இருக்கிறது. அந்தப் பெயர்ச்சொல்தான் எழுவாய். அடுத்து அந்த எழுவாய் செய்த வேலை குறிப்பிடப்படுகிறது. அதுதான் பயனிலை. பறவை எழுவாய். பறக்கிறது பயனிலை. எழுவாயும் பயனிலையும் அடுத்தடுத்து வந்தன. 

இரண்டாம் சொல் க, ச, த, ப வரிசை எழுத்துகளில் ஒன்றில் தொடங்கினால் அங்கே வலிமிகுவிக்க வேண்டுமா என்று பார்க்க வேண்டும். இது நமக்குத் தெரியும். மேற்சொன்ன எழுவாய்த் தொடர்களைப் பாருங்கள். இரண்டாம் சொற்கள் பறக்கிறது, சிரித்தது, சிரித்தாள் என வல்லின எழுத்துகளில் தொடங்குகின்றன. அப்படியானால் அங்கே வலி மிகுமா, மிகாதா என்று முடிவெடுக்க வேண்டும். 

எழுவாய்த் தொடருக்கு வலிமிகாது.

மேலே வந்த எழுவாய்த் தொடர்களில் எங்கும் வலிமிகவில்லை. நன்றாக நினைவிற்கொள்ளுங்கள், ஒரு பெயரும் வினையும் அடுத்தடுத்த வந்தால் அது எழுவாய்த் தொடர் ஆகும். எழுவாய்த் தொடருக்கு வலிமிகுவிக்கக் கூடாது. குழந்தைச் சிரித்தது, வள்ளிச் சிரித்தாள் என்று எழுதினால் அது பிழை. 

இலக்கணத்தில் முதன்மையான ஒன்றினைப் “பொது விதி” என்றும் அந்தப் பொது விதியிலிருந்து விடுபட்டிருக்கும் விதி விலக்குகளைச் “சிறப்பு விதி” என்றும் சொல்வார்கள். எழுவாய்த் தொடருக்கு வலிமிகாது என்பது பொதுவிதி. எழுவாய்த் தொடரில் அரிதாக வலிமிகும் இடங்கள் இவை என்று கூறுவது சிறப்பு விதி. 

எழுவாய்த் தொடருக்கும் சிறப்பு விதி உண்டு. விதிவிலக்கு உண்டு. எழுவாயானது க்கு, ச்சு, ட்டு, த்து, ப்பு, ற்று ஆகிய வன்தொடர்க் குற்றியலுகர எழுத்துகளில் ஏதேனும் ஒன்றில் முடியும் சொல் என்றால் அங்கே வலிமிகுவதும் உண்டு. இந்தப் பண்பு செய்யுள்களில் மிகுதியாகக் காணப்படும். 

கொக்குப் பறந்தது என்று எழுதுவார்கள். செய்யுளில் அசையளவு, சீரளவு, தளை தட்டாமை முதலியவற்றைக் கருவார்கள் என்பதால் அதற்கேற்ற இலக்கண வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வார்கள். நாம் “கொக்கு பறந்தது” என்றே எழுதலாம். எழுவாய்த் தொடரில் வலிமிகாமையே நன்று. 

கொக்கு பறந்தது, குழந்தை சிரித்தது, வள்ளி சிரித்தாள் என்று வினைச்சொல் முழுமையடைந்த நிலையில்தான் வருமா என்ன ?  

கொக்கு பறந்து சென்றது… என்று வருமே. 
குழத்தை சிரிக்கும்போது… என்று வருமே. 
வள்ளி சிரித்து… என்றும் வருமே.

இப்போது என்ன செய்வது ? இரண்டாவதாக வருகின்ற வினைச்சொல் முற்றியதாக இருக்க வேண்டும் என்பதில்லை. எச்சமாகவும் இருக்கலாம். அது நமக்குப் பொருட்டில்லை. முதற்சொல் பெயராகவும் இரண்டாம் சொல் வினையுமாக இருந்தால் போதும். அங்கே வலிமிகுவிக்க வேண்டியதில்லை. 

கொக்கு பறந்து…
குழந்தை சிரித்தபோது...
வள்ளி சிரித்து…

நினைவிற்கொள்ளுங்கள்… ஒரு பெயரும் வினையும் அடுத்தடுத்து வருவது எழுவாய்த் தொடர் எனப்படும். எழுவாய்த் தொடருக்கு வலிமிகாது. அரிதாக வன்தொடர்க் குற்றியலுகரத்தில் செய்யுள்களில் வலிமிகுவதுண்டு.

- கவிஞர் மகுடேசுவரன்