You are here : Arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




பிழையின்றி தமிழ் எழுதுவோம் - தொடர்கள் பற்றி அறியலாம் வாங்க

2019-06-10


வலிமிகுதல் தொடர்பான அறிதலில் மூழ்கியிருக்கும் நம்முடைய நோக்கம் என்னவாக இருக்கிறது..? இரண்டு சொற்கள் சேரும்பொழுது இரண்டாம் சொல் க,ச,த,ப வரிசை வல்லின எழுத்துகளில் தொடங்கினால் அங்கே வலிமிகுமா, மிகாதா..? இங்கே இலக்கணத்தைப் பிடித்து வந்தோமானால் நமக்கு என்ன வழித்தடம் கிடைக்கிறது..? இரண்டு எழுத்துகள் சேர்ந்து பொருள் கொடுத்தால் சொல். இரண்டு சொற்கள் சேர்ந்து வந்தால் அது சொற்றொடர். சுருக்கமாகச் சொன்னால் தொடர். தொடர்களையும் வகைப்படுத்தியிருக்கிறார்கள் என்ற இடத்திற்கு வந்துவிட்டோம். இப்போது வலிமிகுதல் என்ற பண்பினையும் சொற்றொடர்களின் வகைப்பாடுகளையும் ஒருங்கே ஓரிடத்தில் நிறுத்தி நம் விளக்கத்தைப் பெற்றுவிட முடியும்தானே..? அவ்வளவுதான். 

சொற்கள் சேர்ந்து உருவாகும் தொடர்கள் எவ்வாறெல்லாம் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன என்று அறிய வேண்டும். அந்தத் தொடர்களை எல்லாம் அறிந்த பிறகு எந்தத் தொடருக்கு வலிமிகும், எந்தத் தொடருக்கு வலிமிகாது என்று ஒரே வீச்சில் விளங்கிக்கொள்ளலாம். 

இதுவரை விளக்கிய பகுதிகளில் “அப்படியிருந்தால் வலிமிகும், இப்படியிருந்தால் வலிமிகாது” என்று பொத்தாம் பொதுவாகத்தான் தெரிந்துகொண்டோம். அவ்வாறு தெரிந்துகொண்டவற்றை இலக்கணத்தின் துணைகொண்டு இனி அட்டவணைப்படுத்தி ஒரே பார்வையில் நம் அறிவைப் பெருக்கிக்கொள்ளப் போகிறோம். 

அதற்கு முதலில் தொடர்கள் என்பவை யாவை, எதனால் அவை அப்பெயர்களைப் பெற்றன என்னும் விளக்கத்தை அடைய வேண்டும். இரண்டு சொற்கள் சேர்ந்து வரும் நிலையில் அவ்விரு சொற்களின் சேர்க்கை எவ்வகைத் தொடர் என்று ஒரு நொடியில் கண்டுபிடிக்கத் தெரியவேண்டும். அப்படிக் கண்டுகொண்டால் அங்கே வலிமிகுவிக்கலாமா வேண்டாவா என்று அடுத்த நொடியில் நாம் முடிவெடுத்துவிடலாம். 

'பட்ட கடன்' என்று எழுதினால் வலிமிகவில்லை. 'பட்டுக் கயிறு' என்று எழுதினால் வலிமிகுகிறது. இரண்டுக்கும் இடையே ஏன் இந்தப் பாகுபாடு..? அதன் விளக்கம் தொடர்களைப் பற்றிய அறிதலில் அடங்கியிருக்கிறது. 

எந்தத் தொடருக்கு வலிமிக வேண்டும், எந்தத் தொடருக்கு வலிமிகக்கூடாது என்று இடையே குழப்பம் ஏற்பட்டால் என்ன செய்வது..? அப்படியொரு குழப்பம் ஏற்பட வாய்ப்பே இல்லை. ஏனென்றால், எந்தத் தொடருக்குமே வலிமிகுவதில்லை என்பதுதான் அடிப்படை. அவ்வாறு வலிமிகா நிலையில் தோன்றும் தொடர்களில் சிறப்பு நிலைமையாகத்தான் சிலபல இடங்களில் வலிமிகும். அத்தகைய நிலைமைளையும் ஒவ்வொன்றாகப் பார்க்கப் போகிறோம். 

- கவிஞர் மகுடேசுவரன்