You are here : Interview

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS
வர்மக்கலை ஆசான் R. ராஜேந்திரன் உடனான நேர்காணல்

2019-06-09


வர்மக்கலை என்பது ஒரு பாரம்பரிய புகழ்மிக்க தற்காப்பு கலையாகவும், அதனை கற்றவரை நோயற்று சுறுசுறுப்பாக வைக்க உதவுகின்ற கலையாகவும் பண்டைய காலம் முதற்கொண்டு போற்றப்பட்டு வந்துள்ளது. மன்னர்கள் காலத்தில் மன்னர்களையும் அவர் தம் நெருங்கிய உறவினர்களையும் ஆபத்துக்களிலிருந் தும், எதிர்பாராத எதிரிகளின் தாக்குதல்களிலிருந்தும் காப்பாற் றுதல் பொருட்டு அமர்த்தப்பட்டு அரண்மனை பாதுகாப்பு படையில் இடம்பெற்றவர்கள் தான் இந்த வர்மக்கலை வல்லுனர்கள். 
வர்மக்கலையானது முழுமையான முறையில் பகுத்தறியப்பட்டு அகத்திய மாமுனிவரால் உடலை வைத்து வர்மம் உள்ள இடத்தையும் வைத்து அதன் முடிச்சுகளைப் பற்றியும் விளக்கமாக எடுத்து கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள  கிருஷ்ணாபுரத்தில் வசித்து வரும் வர்மக்கலை ஆசான் ஆர்.ராஜேந்திரன் அவர்களை சங்கமத்திற்காக சந்தித்து உரையாடினோம். 

வர்மக்கலை பற்றி அவர் தெரிவித்த கருத்துக்களை தொகுத்து வழங்கியிருக்கின்றோம்.
“வர்மக்கலையை பொறுத்தமட்டில் நான் அகத்திய மாமுனிவரின் பக்தன். வர்மக்கலையில் மருத்துவத்தையும் தற்காப்பையும் இணைத்து மஞ்சா வர்மக்கலை என்ற முறையை அகத்திய முனிவரின் பாணியில் தமிழ்நாட்டில் முதன் முதலாக உருவாக்கியிருக்கின்றேன். அகத்திய மாமுனிவர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே பொதிகை மலையில் தோன்றி தமிழ் வளர்த்த பெருந்தகை என்று  கல்வெட்டுக்கள் கூறுகின்றன. அகத்திய முனிவர், வான சாஸ்திரம், ஜோதிடம், மருத்துவம், ஆன்மீகம் ஆகிய பல்வேறு துறைகளில் புலமை பெற்றிருந்தார். 
காலத்தால் அழியாத வர்மக்கலையை மிகச் சிறந்த முறையில் உலகிற்கு அளித்த மாமுனிவருக்கு கோயில் ஒன்றினை எழுப்ப வேண்டும் என்ற என்னுடைய தீராத அவாவை பெரும் முயற்சிக்குப் பின் பூர்த்தி செய்து கொண்டேன். 

இந்த கோயிலை எழுப்புவதற்காக அகத்தியர் பற்றிய ஏராளமான புத்தகங்களையும், அவர் போதித்த வர்ம ரகசியங்களையும் பெரும் ஆர்வத்துடன் கற்றேன். கடந்த 2011-ஆம் ஆண்டில் மதுரை மாவட்டம் ஏழுமலைக்கு அருகே டி.கிருஷ்ணாபுரம் என்னும் கிராமத்தில் நான்கு ஏக்கர் காணி நிலம் கொள்முதல் செய்து, அதில் 25 சென்ட் பரப்பளவில் தென்கயிலாய பெருமானுக்கு கோயில் எழுப்பினேன். கோயில் வளாகத்தில் விநாயகர், முருகன், அகத்தியர் ஆகியோருக்கு தனித் தனி சன்னதிகள் அமைத்தேன். 

“அகம் அப்பழுக்கற்ற நிலையில் இருக்க வேண்டும். அதற்காக இறைபக்தியுடன் கூடிய நல்ல சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்பதை அகத்தியர் போதித்துள்ளார். அவர் கண்டறிந்த வர்மக்கலையானது அறிவியல் சார்ந் ததும் பாரம்பரியமிக்கதுமாகும். பிற தற்காப்பு கலைகளில் உடல் உழைப்பு மட்டுமே இருக்கும். ஆனால் வர்மக்கலையானது உடலுக்கும் மூளைக்கும் தொடர்புடையது. அதாவது நரம்பு, எலும்பு, ரத்த ஓட்டம் மற்றும் சரவோட்டம் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படும் ஆதி கலையே வர்மக்கலையாகும். வர்மக்கலையின் துணை கொண்டு, முதுகுத்தண்டு பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும் என்பதை நான் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன். 

தமிழ்நாட்டில் பாண்டிய மற்றும் தஞ்சாவூர் மன்னர்களாலும், கேரளாவில் திருவிதாங் கூரின் கடைசி சமஸ்தானத்தாலும் வர்ம கலைக்கு ஆதரவுகள் அளிக்கப்பட்டுள்ளன. கேரள அரசு களரி என்று சொல்லப்படுகின்ற வர்ம கலைக்கு ஆதரவு அளித்து வருகின்றது. இலங்கை, ஜப்பான் போன்ற நாடுகளில் கண்டெடுக்கப்பட்ட பழைமையான சில கல்வெட்டுக்களில் வர்மக் கலை பற்றியதான குறிப்புகள் காணப்படுகின்றன. வர்மக் கலை மிகவும் தொன்மையானது என்பதற்கு இவை சான்றுகளாக விளங்குகின்றன.
 
நோக்கு வர்மம், தொடு வர்மம், படு வர்மம் மற்றும் தட்டு வர்மம் என வர்ம கலை நான்காக பிரிக்கப்பட்டுள்ளது. வர்ம கலையை மெய்தீண்டா கலையாக செய்வது சாத்தியமில்லை, நம்ப முடியாதது என்று கூறி வந்த நிலையில், நான் மூன்று தொலைக்காட்சிகளின் உதவியுடன் மெய்தீண்டா கலையை செய்து நிரூபித்துள்ளேன் என்று பணிவுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். 

இந்தியன் திரைப்படம் தயாரிப்பதற்கு முன்பாக, நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்கு என்னாலான சில ஆலோசனைகளை வழங்கினேன். 

பாரம்பரிய வர்ம கலையை அழிந்து போகாமல் காப்பாற்றுவதற்கு அனைவரும் உரிய முறையில் ஊக்கமளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 


தொகுப்பு: அபிதா மணாளன்