You are here : Kovils

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




தடைகளை மீறி ஐய்யப்பனை தரிசித்த இரண்டு பெண்கள் - 18 படி ஏறினார்களா?

2019-01-03


சபரிமலை வரலாற்றில் முதன்முறையாக பத்து வயதிற்கு மேல் ஐம்பது வயதிற்குட்பட்ட இரண்டு பெண்கள் நுழைந்து ஐய்யப்பனை தரிசித்துள்ளனர். நாற்பது வயதுள்ள இரண்டு பெண்மணிகள் நேரடியாக ஆலயத்திற்குள் சென்று ஐய்யப்பனை தரிசனம் செய்துவிட்டு திரும்பி இருப்பது இதுவே முதன்முறையாகும். 


பல நூற்றாண்டுகால மரபுகள் மீறல், பாரம்பரியம் கெட்டுவிட்டதாகக் கூறி சபரிமலை தந்திரி, கோயில் நடையை அடைத்து சுத்திகலச பூஜைக்கு ஏற்பாடு செய்தார். இந்த சுத்தி கலச பூஜை முடிந்து மீண்டும் சன்னிதானம் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


அனைத்து வயதுப்பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த மூன்று மாத காலமாக கேரள மாநிலம் முழுவதும் இந்து அமைப்புகள், பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சபரிமலையில் அசம்பாவித சம்பவங்கள் நடப்பதைத் தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு போடப்பட்டு, வரும் ஜனவரி 5 ஆம்- திகதி வரை கேரள அரசு நீட்டித்துள்ளது.


இந்நிலையில், 21 நாள் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, பலத்த பாதுகாப்புக்கு இடையே கடந்த 30-ஆம் திகதியன்று மாலை நடை திறக்கப்பட்டது. இந்தச் சூழலில் இன்று (2 1 19) அதிகாலை 3.45 மணி அளவில் கோழிக்கோடு கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்த பிந்து, மலப்புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய இரண்டு பெண்கள் இன்று அதிகாலை சபரிமலைக்கு பொலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

பொலீஸார் சீருடையுடன் செல்லாமல், சாதாரணமாகச் சென்றுள்ளனர். சாமிதரிசனம் செய்த பிந்து, கனகதுர்கா இருவரும், கறுப்பு நிற புர்கா அணிந்தும், தலையில் கறுப்புநிற துணி அணிந்து மூடியும் சாமி தரிசனம் செய்து திரும்பியுள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பியவுடன் பொலீஸார் பாதுகாப்பில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களை பொலீஸார் எங்கு வைத்துள்ளார்கள் என்கிற விவரம் தெரியவில்லை.
இவ்விருவர்களும், ஏற்கெனவே கடந்த மாதம் 24-ஆம் திகதியன்று சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க பொலீஸ் பாதுகாப்புடன் சென்றனர். ஆனால், பிந்து, கனகதுர்காவுக்கு 40 வயதே ஆனதால் பக்தர்களின் கடும் எதிர்ப்பால் இருவரும் கீழே இறக்கப்பட்டனர்.

இதில் கோழிக்கோடு மாவட்டம், கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்த பிந்து, தீவிர மார்க்சிஸ்ட், லெனிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் (சிபிஐ(எம்எல்)) சேர்ந்தவர். இவர் தலசேரியில் உள்ள சட்டக்கல்லூரியில் சிறப்பு பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.மலப்புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா, சிவில் சப்ளை துறையில் பணியாற்றி வருகிறார். இதில் கோயிலாண்டி பகுதியில் உள்ள பிந்துவின் வீட்டுக்கு பொலீஸார் தீவிர பாதுகாப்பு அளித்துள்ளனர்.


இது குறித்து தேவஸம்போர்டு தலைவர் ஏ.பத்மகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது..“ இரண்டு பெண்கள் சபரிமலைக்கு சென்று, ஐயப்பனை தரிசனம் செய்த தகவல் எனக்கு எந்தத் தகவலும் இல்லை. இது குறித்து உறுதியான தகவலை கோயில் நிர்வாகிகளிடம் கேட்டு உறுதி செய்கிறேன்” எனத் தெரிவித்தார்.


இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,“ பெண்கள் சபரிமலைக்குச் சென்று சாமி தரிசனம் செய்ததால், கோயில் நடையைச் சாத்திய தந்திரியின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது. அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்ற அளித்த தீர்ப்புக்கு எதிராகத் தந்திரி செயல்படுகிறார்” எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இதனிடையே இந்த இரண்டு பெண்மணிகளும் சபரிமலை அய்யப்பனை பதினெட்டு படி ஏறி தரிசிக்கவில்லை என்றும், பதினெட்டு படி ஏறாமல் பின்வாசல் வழியாக வந்து அய்யப்பனை தரிசித்திருக்கிறார்கள் என்றும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.