You are here : archaeology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS
கதை கூறும் நமது ஊர்களின் பெயர்கள் - கொழும்பு

2018-08-20


ஒவ்வொரு ஊரினதும் முக்கியத்துவம் அதன் பெயரில் பொதிந்து உள்ளது. அதனை ஆராயும் போது ஊரின்  தொன்மையும் பெருமையும் மட்டுமன்றி அதன் வரலாற்றையும் அறிய முடிகின்றது.


அந்த வகையில் எமது திருநாட்டின் தலைநகரான கொழும்பின் ஒவ்வொரு பகுதியினை குறிக்கும் பெயர்கள் அவ் இடத்தை பற்றி எமக்கு கதை கூறுகின்றது. 


புறக்கோட்டை


கொழும்பு பல்லாண்டுகளாக தென்னாசியாவிலேயே கேந்திர முக்கியத்துவம் வாய்ந்திருந்த துறைமுகப் பெருநகராக விளங்கியுள்ளது. இன்று புறக்கோட்டை என அழைக்கப்படும் இவ்விடம் பிரித்தானியர் காலத்தில் முதன்மையான வணிகர்களுள், இடம்பிடித்திருந்த தமிழ்நாட்டுச் செட்டியார்கள்  வசித்த இடமாகும். இது  தமிழ்வழக்கில் புறநகர்ச் சந்தையைக் குறிக்கும் "பேட்டை" என்ற பெயரில் அழைக்கப்பட்டது. ஆங்கிலத்தில் அது "பெற்றா" என்று மருவியது. அதேபொருளிலேயே சிங்களத்தில் "பிட்டக்கொட்டுவ", என அழைக்கப்பட்டது. 
 

காலிமுகத்திடல்


காலி முகத்திடல் என்றதும் இலங்கையின் தென் கரையில் இருக்கும் ஊர்பேயர் ஏன் இங்கு வந்தது என எண்ணத் தோன்றும் ஆனால். இலங்கையில் வரலாற்றில் 1588 ஆம் ஆண்டில் போர்த்துக்கேயரால் கட்டப்பட்ட கோட்டை அமைந்துள்ள இடம் தான் காலி.  இந்த வரலாற்று சிறப்புமிக்க நகருக்கான வீதி இலங்கையின் முக்கியமான சாலைகளில் ஒன்று.  "காலி வீதி" துவங்கும் இடம் என்பதாலேயே, காலிமுகத்திடலுக்கு அப்பெயர் வந்தது. முன்பு சதுப்புநிலமாக இருந்த இவ்விடம், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் முயற்சியால் இன்று போல், மாபெரும் களியாடுகளமாக மாற்றப்பட்டிருக்கின்றது

 

மிலாகிரிய

1853இல் மிலாகிரிய தேவாலயம்

இலங்கையின் மிகப்பழைமையான தேவாலயங்களில் ஒன்று, பம்பலப்பிட்டி மிலாகிரிய புனித பவுல் தேவாலயம். போர்த்துக்கேயரால் இது முதன்முதலில் அமைக்கப்பட்டபோது, அற்புத அன்னை ஆலயமாக (Nossa Senhora dos Milagres - Our Lady of Miracles) விளங்கியது. "மிலாக்ரஸ்" எனும் அந்தப் போர்த்துக்கேயச் சொல்லின் சிங்களத் திரிபு தான் "மிலாகிரிய"!
 


முற அட்டுவ (மொரட்டுவை)


கோட்டை அரசின் ஒரு "முற அட்டுவ" (காவலர் கண்காணிப்புக் கோபுரம்) அமைந்திருந்த இடம் மறுவி  இன்றைய "மொரட்டுவை" உருவானதாம்

பம்பலப்பிட்டியின் பெயர், “பம்பளிமாஸ் பழத்திலிருந்து” (Grape fruit) வந்ததாக நம்பப்படுகின்றது. அதன் சிங்களப்பெயர், ஜம்புல. 

 

பத்கொடமுல்ல (பத்தரமுல்லை)
கோட்டை அரசின் சமையற்கூடம் அமைந்திருந்த இடமே பத்தரமுல்லை. தியவன்னை ஓயாவின் அக்கரையில் இருந்த அது, ஆரம்பத்தில் பத்கொடமுல்ல (சோறு வந்திறங்கும் மூலை) என்று அழைக்கப்பட்டிருந்ததாம்!
புதுக்கடை 
புதுக்கடை அல்லது கோட்டடி என்று அறியப்படும் பகுதியின் ஒல்லாந்துப்பெயர் "Hulftsdorp" (ஹல்ஃப்ஸின் ஊர்). ஹல்ஃப்ஸ் என்பவன் ஒல்லாந்துத் தளபதி. கோட்டையைக் கைப்பற்ற, போர்த்துக்கேயருடன் இடம்பெற்ற போரில் அவன் இறந்ததன் நினைவாக அவ்விடம் அப்பெயர்பெற்றது. 

 

கொட்டஹேன (கொட்டாஞ்சேனை) 


வாதுமை / பாதாம் மரங்களின் தோட்டம் அமைந்திருந்த இடம் கொட்டாஞ்சேனை. கொட்டான்/கொட்டம்ப என்பது வாதுமையின் (Indian almond) சிங்களப்பெயர். அதுவே கொட்டஹேன வாக உருவானது.


கொல்லன் பிட்டிய (கொள்ளுப்பிட்டி )


17ஆம் நூற்றாண்டளவில் கண்டிமன்னன் இரண்டாம் இராசசிங்கனுக்கெதிராக, கிளர்ச்சி செய்து, தப்பியோடி வந்த அம்பன்வெல அப்புகாமி, ஒல்லாந்தரின் நட்பைப்பெற்று, “பரதெனிய” என்ற கிராமத்தில் பிழைப்புக்காக தெங்குத்தோட்டம் நடத்தலானான். மெல்ல மெல்ல, அவன் செல்வாக்கு அதிகரித்து, அவனால் உள்ளூர்வாசிகளின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. அப்புகாமி யினால் “கொள்ளையிடப்பட்ட பூமி” என்ற பொருளில்,“பரதெனிய”   சிங்களத்தில் “கொல்லன் பிட்டிய” என்றழைக்கப்பட்டது. இது காலப்போக்கில் கொள்ளுப்பிட்டியாக மாற்றம் பெற்றது.

 

தெகிவளை


கோட்டை அரசுக்குத் தேவையான எலுமிச்சைகள் பயிரிடப்பட்ட பகுதி "தெகிவளை". "தெஹி" என்றால் எலுமிச்சை என்று பொருள். பல நீர்நிலைகள், குளங்கள் அமைந்திருந்த "தியவல" (நீர்க்குழி/பூவல்) என்பதே திரிந்து தெகிவல ஆனது என்பாரும் உண்டு. 
தெகிவளையில் உள்ள, "களுபோவில" (களு+போ+வில் = கருப்புப் போதிமரத்தடிக் குளம்) முதலான இடப்பெயர்கள் இக்கருத்துக்கு வலுச்சேர்க்கும்.

 

கல்கிசைக்குப் பெயர் தந்த காதலி. 


இலங்கையின் பிரித்தானிய ஆளுநர்களுள் ஒருவரான தோமஸ் மெய்ட்லாண்ட், தன் மனங்கவர் ஆடலரசியான லவினியாவின் பெயரைக் கல்கிசையில் தன் மாளிகை அமைந்திருந்த சிறுகுன்றுக்கு மவுண்ட் லவினியா என பெயர் சூட்டினார். ஆங்கிலேய அரசுடனான தன் உத்தியோகபூர்வக் கடித முகவரிகளில், அதே பெயரையே அவர் பயன்படுத்தியதால், அதுவே ஆங்கிலத்திலும் நிலைபெற்று விட்டது.

(நன்றி thulanch.blogspot)