You are here : archaeology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




தீபாவளி பண்டிகைக்கு மட்டும் திறக்கப்படும் ஹாசனாம்பா கோவில் - ஓர் ஆண்டு வரை அணையா தீபமும்... வாடா மலரும்...

2018-11-04


கர்நாடக மாநிலம் ஹாசனி எனும் ஊரில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில் உள்ளது. இந்த கோவிலில்மண்புற்று வடிவில் அன்னை ஹாசனாம்பாதேவியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.  இங்கு சிவன் சித்தேஸ்வரராக லிங்கவடிவில் காட்சி தருகிறார். அத்துடன் அவருடன் பாசுபதாஸ்திரம் பெற்றுக்கொள்ளும் நிலையில் அர்ச்சுனன் காணப்படுகிறார்.


உற்சவ மூர்த்தியான சிவனின் நெற்றியில் ஒளி வீசும். இதை நாம் ஆண்டுதோறும் கோவில் நடை திறக்கப்படும் வேளைகளில் கண்டு ரசிக்கலாம்.

கல்லாய் போன திருடர்கள் :
அதுபோல் கோவிலில் கல்லப்பா குடி என்ற சன்னிதி உள்ளது. இந்த சன்னிதியில் 4 கல் சிலைகள் உள்ளன. இதற்கு ஒரு வரலாறு உண்டு. அதாவது கோவிலுக்குள் புகுந்த 4 திருடர்கள் தேவியின் கழுத்தில் கிடந்த ஆபரணங்களை திருட முயற்சித்துள்ளனர். இதனால் கடும் கோபமடைந்த தேவி, 4 பேரும் கல்லாய் போகட்டும் என்று சாபமிட்டதாகவும், அதனால் அந்த 4 பேரும் கல்லாய் நிலைத்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது. 4 பேரும் நிலைகொண்ட இடம் ‘கல்லப்பா குடி’ என அழைக்கப்படுகிறது.

12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயம் :


இந்த ஆலயம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைப் போல அம்மனை மூலஸ்தான மூர்த்தியாக பூஜைகள் நடத்தப்படும் ஆலயமாகும். இத்தகைய புகழ்பெற்ற ஹாசனாம்பாவுக்கு சுமார் 12-ம் ஆண்டு நூற்றாண்டில் கிருஷ்ணப்பா நாயக்க பாளையக்காரரின் காலத்தில் கோவில் எழுப்பப்பட்டது.
சிம்ஹாசனபுரி என்பது அர்ச்சுனனின் பேரன் ஜனமேஜய மகாராஜனின் இடம் என்றும் கூறுவர். இங்கு ஹாசனாம்பா தேவி நிலைத்த பிறகு ஹாசனா என பெயர் பெற்றதாக சொல்லப்படுகிறது.

தலபுராணம்:
இந்த கோவிலுக்கு தலப்புராணம் உள்ளது. அதாவது, சப்த கன்னியர்களான பிரம்ஹிதேவி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் வாரணாசியில் இருந்து தெற்கு பகுதிக்கு புத்துணர்வுக்காக வலம் வந்தார்கள் என்றும், அந்த சப்த கன்னியர்களில் வைஷ்ணவி, கவுமாரி, மகேஸ்வரி அம்மன்கள் ஹாசனாம்பா கோவிலில் மண்புற்றின் வடிவத்தில் நிலைத்தார்கள் என்றும், பிரம்ஹிதேவி கெஞ்சம்மனின் புதுக்கோட்டையில் நிலைக்கொண்டிருக்கிறார் என்றும், சாமுண்டி, வராகி, இந்திராணி ஹாசன் நகரில் உள்ள தேவி கெரேயில் நிலைகொண்டு இருப்பதாகவும் பக்தர்களால் நம்பப்படுகிறது.

அணையா தீபமும்... வாடா மலரும்... 


ஹாசனாம்பா கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கோவில் பலிபட்யாமி என்ற நாளில் நடை சாத்தப்படுவது வழக்கம். அன்றைய தினத்தில் இந்த கோவிலில் தீபம் ஏற்றப்படுகிறது. இந்த தீபம் அடுத்த ஆண்டு கோவில் நடை திறக்கப்படும் நாள் வரை அணையாமல் எரிந்து கொண்டிருக்குமாம்.
அதுபோல் நடைமூடப்படும் அன்று ஹாசனாம்பா தேவிக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்படும். அவ்வாறு அர்ச்சனைகள் செய்யப்படும் பூக்கள், மாலையிடப்படும் பூக்கள் அடுத்த ஆண்டு வரை வாடாமல் இருக்கும் என்பது பக்தர்களால் நம்பப்படுகிறது. இந்த இரு அதிசயங் களின் கண்கொள்ளாக் காட்சிகளை பார்ப்பதற்காக ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் கோவில் திறக்கப்படும் நாளில் அம்மனை காண வருகிறார்கள்.

ஆண்டுக்கு ஒரு முறை நடை திறப்பு :


இந்த கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை, அதாவது 10 நாட்கள் மட்டுமே நடை திறந்து பூஜை நடத்தப்படும் என்பது சிறப்பம்சமாகும். அதாவது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புரட்டாசி மாதம் இறுதி முதல் ஐப்பசி மாதம் முதல் வாரத்திற்குள் வரும் பவுர்ணமிக்கு அடுத்த வியாழக்கிழமை கோவில் நடை திறக்கப்பட்டு, அமாவாசைக்கு அடுத்த 3-வது நாள் கோவில் நடை சாத்தப்படுவது வழக்கமாக உள்ளது. அதாவது 10 நாட்களும் இரவு முழுவதும் நடைசாத்தப்படாமல் திறந்தே இருக்கும்.
கோவில் நடை திறக்கப்படும் முதல் நாளில் ஹாசன் மாவட்டம் மட்டும் இன்றி மாநிலம் முழுவதில் இருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். தலவார் குடும்பத்தினர் கர்ப்பகிரகத்துக்கு எதிரே வாழைத் தண்டுகளை நட்டுவைத்து, ஹாசனாம்பாவை பயபக்தியுடன் பஜனைகள் பாடுவார்கள். பின்னர் அந்த வாழைத்தண்டுகளை வெட்டியதும், கோவில் நடை திறக்கப்படுவது இன்று வரை நடைமுறையில் இருக்கும் ஐதீகமாகும்.
கோவில் நடை திறந்திருக்கும் 10 நாட்களும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை, அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.