You are here : archaeology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS
ராசிகளில் சூரிய ஒளி படும் கோவில் - குரு ரூபமாக அருளும் சிருங்கேரி சாரதாம்பாள்

2019-01-28


கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து 100 கி.மி. தூரத்தில் அமைந்துள்ள தலம் சிருங்கேரி. ரிஷ்யசிருங்க பர்வதம் என்று அழைக்கப்படும்  அழகிய மலைகள் சுற்றிலும் அரண் செய்ய, துங்கபத்திரா புனித நதியின்  சாரலில், எழில்மிகு கோலத்துடன், ஆன்மீகச் சிறப்புடன் விளங்கி வருகிறது இவ்வாலயம்.


ஆதிசங்கரர் அத்வைத வேதாந்த தத்துவத்தைத் தென்னாட்டில் ஸ்தாபிக்க ஓர் மடத்தை நிறுவும் நோக்கில்  அதற்காகத் தகுந்த இடம் தேடி  பாத யாத்திரை மேற்கொண்ட போது சிருங்கேரியில் ஓர் அற்புதக் காட்சியைக் கண்டார். கொளுத்தும் வெயிலில் நிறைமாத கர்ப்பிணியான தவளை ஒன்று பிரசவ வேதனையால் துடித்தபோது, ஒரு நல்ல பாம்பு படமெடுத்து தவளைக்கு நிழல் கொடுத்தது. ஒன்றுக்கொன்று பகையான அவை ஒன்றன்மீது ஒன்று அன்பு செலுத்தும் காட்சி அவரை அந்த இடத்தை  மடம் நிறுவத்தகுந்த தேர்தெடுக்க செய்தது.


ஆதிசங்கரர், தன் 32 வருட வாழ்நாளில் சுமார் 12 வருடம் சிருங்கேரியில் தங்கி, சாரதாம்பாள் கோவிலையும், மடத்தையும் அமைத்து, அத்வைத வேதாந்தம், உபநிஷதத்தின் உண்மைப் பொருள் விளக்கம் செய்த பெருமைக்குறிய தலம் இது. 


ஆரம்பகாலத்தில்  மலைப்பாறையில் கூரையினால் வேயப்பட்டு ஸ்ரீ யந்திரம் ஸ்தாபிக்கப்பட்டு சந்தன மரத்தினால் செய்யப்பட்ட ஸ்ரீ தேவியின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின் வித்யாரண்யரை அடுத்து வந்த ஆச்சாரியர்களால் கற்களால் மேலே கோபுரம் எடுத்துக் கட்டப்பட்டது. 1906ல் மைசூர் மகாராஜா முன்னிலையில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.


இங்கு சாரதாம்பாள் கையில் அமிர்த கலசம், புத்தகம், அக்ஷர பீஜங்களைக் குறிக்கும் ஜபமாலை, ஜீவன், பிரம்மனைக் குறிக்கும் சின்முத்திரையுடன், உபநிஷத அறிவின் ஒளியாக, பிரம்ம வித்யாவாகவும் குரு ரூபமாக அருள்கிறாள்.  ஸ்ரீயந்திரத்தில் அமர்ந்துள்ளதாலும், லலிதா திரிபுர சுந்தரியாகவும் சாரதா பரமேஸ்வரியாகவும் துதிக்கப்படுவதாலும், தினம் லலிதா ஸஹஸ்ரநாமம், லலிதா த்ரிசதி சொல்லி பூஜை செய்யப்படுகிறது. ஸ்ரீசாரதாம்பாள் பிரம்ம வித்யாவாக பிரம்மா, விஷ்ணு, சிவன் அவர்களது சக்தியான சரஸ்வதி, லக்ஷ்மி, உமை ஆகியோர்களுடன் துதிக்கப்படுகிறாள்.


இந்த ஆலயத்தில் வேறு எங்கும் இல்லாத சிறப்பு ஒன்று உள்ளது.  மூலவர் கருவறையின் முன்பாக அமைந்துள்ள மண்டபத்தின் 12 தூண்களிலும், 12 ராசிகளுக்கான அதிபதிகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.  சூரியன் ஒவ்வொரு ராசியிலும் சஞ்சரிக்கும் அந்தந்த மாதங்களில், ஆலயத்தில் உள்ள ராசிக்கான அதிபதிகளின் உருவத்தின் மீது சூரிய ஒளிபடுகிறது. இதனைக் காண்பதற்காகவே இந்த ஆலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

சங்கரர் மடத்தை ஸ்தாபித்தபோது சிருங்கேரி கிராமத்தை தீயசக்தி மற்றும் நோய்கள் தாக்காமல் இருக்க நான்கு திசைகளிலும் நான்கு கோயில்களை அமைத்தார். கிழக்கில் கால பைரவர், மேற்கில் ஆஞ்சநேயர், தெற்கில் துர்கை, வடக்கே காளி ஆகியோருக்குக் கோயில்கள் கட்டினார். சாரதாம்பாள் ஆலயத்தை அடுத்துள்ள வித்யா சங்கரர் ஆலயம் கலை, நுணுக்க வேலைப்பாடுகளுடன் கற்களால் மிக அழகுற அமைக்கப்பட்டுள்ளது. அளவற்ற ஆன்மீக அதிர்வலைகளை உடையது இவ்வாலயம். இங்கு வந்து தரிசித்தால் மன அமைதியையும், ஆன்மீக உணர்வுகளையும் ஒருவர் நன்கு உணர முடியும். .