You are here : archaeology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




"ஐ" எனும் தமிழ் எழுத்து முதன் முதலில் குறிப்பிடப்பட்டுள்ள திருநாதர்குன்று கல்வெட்டு

2019-08-13


தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டமே வரலாற்றுச் சின்னங்கள் பல நிறைந்த ஒரு மாவட்டம். விழுப்புரத்தின் சிற்றூர்கள் ஒவ்வொன்றிலும் ஏதாவது ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட பல புராதனச் சின்னங்கள் உள்ளன. அதில் மிகக் கணிசமான அளவிற்குச் சமண சமயம் சார்ந்த சின்னங்கள் இருப்பதைக் குறிப்பிடலாம்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி கோட்டையின் வடக்கே திருநாதர்குன்று எனும் ஒரு சிறிய மலை உள்ளது. இம்மலையில் உள்ள பாறைச்சிற்பம் மட்டுமல்ல, கல்வெட்டும் கூட, தமிழ் எழுத்து, தமிழ் மொழி வரலாற்றில் முக்கிய இடம் பெற்றுள்ள ஒன்றாக அமைகின்றது.

இந்த மலை மீது மூன்று கல்வெட்டுகள் உள்ளன. முதிர்ந்தநிலை தமிழி (பிராமி) எழுத்திலிருந்து வட்டெழுத்தாகத் தமிழ் வளர்ந்த நிலையில் உள்ள, மாறுதல் அடைகிற காலகட்டத்தைச் சேர்ந்த கல்வெட்டு இது என்ற சிறப்பைப் பெறுவதாக இக்கல்வெட்டு திகழ்கின்றது. இந்த திருநாதர்குன்றில் உள்ள தமிழ் பிராமியிலிருந்து வட்டெழுத்துக்கு மாற்றம் பெறுவதாகக் கருதப்படும் கல்வெட்டில்தான் ‘ஐ’ எனும் தமிழ் எழுத்து முதன் முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.   வரலாற்று ஆய்வாளர்களுக்கு இது முக்கியமானதொரு சான்று அல்லவா?

இங்குள்ள ஒரு கல்வெட்டு,சந்திரநந்தி ஆசிரியர் எனும் சமணத்துறவி 57 நாட்கள் உண்ணா நோன்பிருந்து வடக்கிருந்து உயிர்நீத்தார் என்ற செய்தியையும் சொல்கின்றது. இது கி.பி.2ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு எனக்கூறலாம்.

மற்றொரு கல்வெட்டு, இளையபட்டாரகர் எனும் சமணத்துறவி முப்பது நாட்கள் உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தார் என்ற செய்தியைச் சொல்கின்றது. அதே போல மேலும் பல்லவ காலத்துத் தமிழ் கல்வெட்டு ஒன்றும் இங்குள்ளது. இப்படி வரிசை வரிசையாகக் கல்வெட்டுக்கள் நிறைந்த ஒரு குன்றுப்பகுதிதான் இது. 
இம்மலையின் உச்சியில் ஒரு பெரிய கற்பாறை உள்ளது. அதில் சமண அறத்தைப் பரப்பிய இருபத்து நான்கு தீர்த்தங்கர்களின் திருமேனிகள் செதுக்கப் பட்டுள்ளன. அவை தீர்த்தங்கரர்கள் அனைவரும் அமர்ந்த நிலையில், இருவரிசைகளில் ஒரே அளவில் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தீர்த்தங்கரரின் தலையின் மேற்பகுதியிலும் முக்குடை காணப்படுகிறது. தீர்த்தங்கரர்களுக்கே உரித்தான தனித்தனி சின்னங்கள் என்பன இல்லாமல் இவை காணப்படுகின்றன. மிக அழகியதொரு கலை வேலைப்பாடு இது. சிற்பத் தொகுதி இருக்கும் கற்பாறையின் மேற்குப்பகுதியில் ஒரு குகை காணப்படுகிறது. இந்தக் குகைப்பகுதியில் சமண முனிவர்கள் தங்கி இருந்து இங்கே சமண சமயத்தை வளர்த்துள்ளனர். 


மலையின் நடுப்பகுதியில் ஒரு பெரிய பாறையில் ஒரு தீர்த்தங்கரரின் சிலையும், சிலையின் மேற்பகுதியில் கல்வெட்டுச் சான்றும் இருந்துள்ளன. ஆனால் அது இரண்டாக உடைக்கப்பட்டு தற்போது வீழ்ந்து கிடக்கிறது. 

-Subashini Thf