You are here : archaeology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS
தென்னிந்திய மக்கள் சிந்து சமவெளி நாகரீகத்தின் வழித்தோன்றல்கள் : மறு உறுதி செய்யும் ஆய்வுகள்

2019-10-24


ராகுல்ஜி என்றழைக்கப்படும் பிரபல வரலாற்று-தத்துவ ஆய்வாளர் ராகுல் சாங்கிருத்யாயன் எழுதிய ‘வால்காவிலிருந்து கங்கைவரை’ புத்தகம் புகழ்பெற்றது. உலகிலுள்ள ஒவ்வோர் இனமும் எப்படித் தோன்றி வளர்ந்தது, குறிப்பாக இந்திய நிலப்பகுதியில் வாழும் பல்வேறு இனத்தினர் எப்படி இங்கே வந்தார்கள் என்பது குறித்து அந்தப் புத்தகம் சுவாரசியமாக வரலாற்றை முன்வைக்கின்றது. 

தென்னிந்தியாவிலும் வட இந்தியாவிலும் காலம் காலமாக வாழ்ந்தவர்கள் இரு வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள்; அவர்கள் இயல்பாக இணைந்திருக்க முடியாமல் போன்றதற்கு இதுவே அடிப்படைக் காரணம் என்று அந்தப் புத்தகம் கூறுகிறது. அன்றைய சம்ஸ்கிருதமோ - அது முன்வைத்த பண்பாடோ; இன்றைய இந்தியோ - அது முன்வைக்கும் கலாசாரமோ சட்டென்று நம் மனங்களுக்குள் புகுந்துவிட முடிவதில்லை. அதற்குக் காரணம் நம்முடைய மரபணுக்கள். சமீபத்திய அறிவியல் ஆய்வு முடிவுகளும் இந்த வரலாற்று உண்மைகளை மறு உறுதி செய்கின்றன.

ஆப்பிரிக்காவிலிருந்து 65,000 ஆண்டுகளுக்கு முன் நவீன மனிதர்கள் கால்நடையாகவே இந்தியத் துணைக்கண்டத்தை வந்தடைந்தார்கள். இதற்கு உயிர்சாட்சியாக அந்தமான் தீவுகளில் இன்றைக்கும் வாழ்ந்துகொண்டிருக்கும் கற்காலப் பழங்குடிகளான ஜரவாக்கள் திகழ்கிறார்கள். அப்படி வந்தவர்கள் வேட்டை-உணவுசேகரிப்பு வாழ்க்கையை வாழ்ந்தார்கள்.

இவர்களை ‘முதல் இந்தியர்’கள் எனலாம். பண்டைய தென்னிந்தியாவில் வாழ்ந்தவர்களும் ‘முதல் இந்தியர்’களே. இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் வாழ்ந்த மக்கள், ‘முதல் இந்தியர்’கள், ஈரானிய வேட்டை-உணவு சேகரிப்பாளர்களின் கூட்டு மரபணுக்களால் உருவானவர்கள். இந்த மக்களே சிந்து சமவெளி நாகரிகத்தைக் கட்டமைத்தவர்கள், அதற்கு அடித்தளமாக அவர்கள் சுயமாகக் கண்டறிந்த வேளாண்மை அமைந்தது.

ஏற்பட்ட நீடித்த வறட்சியின் காரணமாக சிந்து சமவெளி நாகரீகம் சரிவைக் கண்டது. இதன் தொடர்ச்சியாக வடமேற்கு இந்தியப் பகுதிகளிலிருந்து (இன்றைய பாகிஸ்தான், குஜராத், ராஜஸ்தான், ஹரியாணா) தென்கிழக்கு நோக்கி அவர்கள் நகர்ந்தார்கள். இப்படி நகர்ந்த சிந்து சமவெளி நாகரிகத்தினர், ஏற்கெனவே தென்னிந்தியாவில் வாழ்ந்துகொண்டிருந்த ‘முதல் இந்தியர்’களுடன் கூடினார்கள். இதன் காரணமாக நவீனத் தென்னிந்திய மூதாதையர் மரபு உருவானது.

இதே காலத்தில் மத்திய ஆசிய புல்வெளி பகுதியில் ஆடுமாடு மேய்த்தவர்கள் (ஆரியர்கள்) வட இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தார்கள். சிந்து சமவெளி நாகரீகத்தினருடன் கூடிய அவர்கள் வட இந்திய மூதாதையர் மரபைத் தோற்றுவித்தார்கள். 

ஆரியர்கள்தாம் வட இந்திய மரபை உருவாக்கினார்கள் என்பதற்கு ஆதாரம் என்ன? 
வரலாற்றில் வெண்கலக் காலம் (Bronze Age) என்று குறிப்பிடப்படும் காலத்தில் சிந்து சமவெளியிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் வாழ்ந்த மக்களுடன் மத்திய ஆசிய மக்கள் கலந்திருக்கிறார்கள். அதன் காரணமாகத்தான் ‘இந்தோ-ஈரானிய மொழிக் குடும்ப’த்திலும் ‘பால்டோ-ஸ்லாவிக் மொழிக் குடும்ப’த்திலும் பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன. இந்த ஒற்றுமைக்கு ஆரியர்களே காரணம்.

மேற்கண்ட ஆதாரங்கள் 92 மதிப்புமிக்க அறிவியலாளர்கள் இணைந்து எழுதிய ‘தெற்கு, மத்திய ஆசியாவின் மரபணு சேர்க்கை' (The Genomic Formation of South and Central Asia) என்ற தலைப்பில் கடந்த ஆண்டு வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த ஆராய்ச்சிக் கட்டுரை மதிப்பிடப்பட்டு (peer reviewed), 117 அறிவியலாளர்களை இணை ஆசிரியர்களாகக் கொண்டு மேம்படுத்தப்பட்டு, ‘சயின்ஸ்’ என்ற மதிப்புமிக்க இதழில் வெளியாகியுள்ளது.

இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டவர் ஹார்வர்டு மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த வாகீஷ் நரசிம்மன். இந்தியாவின் மத்திய செல், மூலக்கூறு உயிரியல் மையத்தைச் சேர்ந்த குமாரசாமி தங்கராஜ், ஹார்வர்டு மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த டேவிட் ரீஷ் ஆகியோர் இதன் இணை ஆராய்ச்சியாளர்கள். இவர்களுடன் இந்திய ஆராய்ச்சியாளர்கள் நீரஜ் ராய், வசந்த் ஷிண்டே ஆகியோரும் அடங்குவர்கள்.

அடுத்ததாக சிந்துசமவெளி நாகரீக நகரங்களில் ஒன்றான ராகிகாரியில் (இன்றைய ஹரியாணாவில் உள்ளது) 4,600 ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த ஒரு பெண்ணின் டி.என்.ஏ. ஆராயப்பட்டுள்ளது. ராகிகாரி பெண் எலும்புக்கூட்டில் கிடைத்த மரபணுவில் புல்வெளியில் ஆடுமாடு மேய்ப்பவர்களின் (ஆரியர்கள்) மரபணுக் கூறு இல்லை. அதாவது சிந்து சமவெளி நாகரிக மக்களுக்கும் ஆரியர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

சிந்து சமவெளி நாகரீகம் சரிந்த பிறகு, பொ.ஆ.மு. 2000-லிருந்து 1500-க்குள் ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்திருக்கலாம். பொ.ஆ.மு. 2600-க்கு முற்பட்ட ராகிகாரி பெண் எலும்புக்கூட்டில் ஆரியர் மரபணுவுக்கான தடயம் இல்லாததன் மூலம் இந்தக் கருத்து உறுதிப்படுகிறது. எனவே, சிந்து சமவெளி நாகரிகம் ஆரியர்களுக்கு முற்பட்டது. ஆரியர்கள் அந்த நாகரிகத்துக்குப் பிந்தையவர்களே. ஆரியர்கள் பேசிய மொழியையும் சிந்து சமவெளி நாகரிகத்தினர் பேசவில்லை. அதற்கு முற்பட்ட மொழியையே பேசியிருக்கிறார்கள். ‘இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்ப’ மொழிகள் ஆரியர்கள் வழியாகவே இந்தியத் துணைக்கண்டத்துக்கு வந்துள்ளன.

‘பண்டைய ஹரப்பா ஜீனோமில் புல்வெளி ஆடுமாடு மேய்ப்பவர்கள் (ஆரியர்கள்), ஈரானிய உழவர்களின் கூறுகள் இல்லாதது’ (‘An ancient Harappan genome lacks ancestry from Steppe Pastoralists or Iranian Farmers’) என்பதே ராகிகாரி ஆராய்ச்சிக் கட்டுரையின் தலைப்பு. ‘செல்’ இதழில் வெளியான இந்தக் கட்டுரை 28 அறிவியலாளர்களால் எழுதப்பட்டது. முதன்மை ஆய்வாளர் டெக்கான் கல்லூரி இயக்குநர் வசந்த் ஷிண்டே. முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரையில் பங்களித்த நரசிம்மன், தங்கராஜ், ரீஷ், நீரஜ் ஆகியோரும் இதில் பங்களித்துள்ளனர்.

சரி, இந்த இரண்டு ஆராய்ச்சிகளுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? சிந்து சமவெளி நாகரீகத்தினர் வேளாண்மை சார்ந்த பரிசோதனைகளை சுயமாகவே மேற்கொண்டவர்கள் என்பதற்கான ஆதாரங்கள் இந்த ஆராய்ச்சிகளால் வலுவடைந்துள்ளன. ‘ஸேபு’ எனப்படும் திமில் கொண்ட இந்திய மாடு, எருமை வகைகளை அவர்கள் கால்நடைகளாகப் பழக்கப்படுத்தியுள்ளனர். அந்தத் திறன் வேறெங்கிருந்தும் கடன் வாங்கப்பட்டிருக்கவில்லை. அதன் தொடர்ச்சியே ஜல்லிக்கட்டு. சிந்து சமவெளியில் ஜல்லிக்கட்டு நிகழ்ந்ததற்கான ஆதாரம் உள்ளது.

அப்படியானால், சிந்து சமவெளி நாகரீகத்தினர் பேசிய மொழி எது? 
மரபணுத் தரவுகளுடன் தொல்லியல், மொழியியல் சான்றுகள் அடிப்படையில் பார்த்தால், சிந்து சமவெளி நாகரீக மக்கள் பூர்வ திராவிட (Proto-Dravidian) மொழியையே பேசியிருக்க வேண்டும். தென்னிந்தியாவில் வாழ்ந்துவந்த ‘முதல் இந்தியர்’களுடன் சிந்து சமவெளி நாகரிகத்தினர் கூடியபோது, அவர்களிடமிருந்து பூர்வ திராவிட மொழி தென்னிந்திய மூதாதையர் மரபுடன் கூடியிருக்க வேண்டும். அதன் காரணமாக திராவிட மொழி முகிழ்த்திருக்க வேண்டும். ஐராவதம் மகாதேவன், அஸ்கா பர்போலா, கமில் சுவலபில், ஆர். பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்வைத்த கருதுகோள்களும் ஆராய்ச்சிகளும் இதையே வலியுறுத்துகின்றன.

அது மட்டுமில்லாமல் ஷாஹ்ர் இ சூக்தே, கோனூர் (இன்றைய ஈரான், துருக்மெனிஸ்தான்) ஆகிய பகுதிகளுக்கு சிந்து சமவெளியிலிருந்து இடம்பெயர்ந்தவர்களின் டி.என்.ஏ. மாதிரிகள் ஆராயப்பட்டுள்ளன. அவர்களில் இரண்டு பேருடைய ‘ஒய்’ குரோமோசோம் இன்றைய தென்னிந்திய மக்களிடையே முதன்மையாகக் காணப்படுகிறது. மேற்கண்ட ஆராய்ச்சி முடிவுகளின்படி தென்னிந்திய மக்கள் சிந்து சமவெளி நாகரீகத்தின் வழித்தோன்றல்கள் என்ற கருத்து தற்போது வலுவடைந்திருக்கிறது.

‘New reports clearly confirm ‘Arya’ migration into India’, Tony Joseph, The Hindu Magazine – என்ற கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டது
நன்றி 
இந்து