You are here : arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




சிகாகோவில் நான்கு நாட்கள் நடைபெற்ற முப்பெரும் தமிழ் விழா தொகுப்பு - பகுதி 01

2019-09-10


வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 32 ஆம் தமிழ் விழா, பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, சிகாகோ தமிழ்ச்சங்கம் பொன்விழா என முப்பெரும் தமிழ் விழா சிகாகோ நகரில் SCHAUMBURG CONVENTION CENTRE இல் கடந்த ஜூலை மாதம் 04ஆம் திகதி முதல் 07ஆம் திகதிவரை 4 நாட்கள் மிகச் சிறப்பாக நடந்தேறியது.


முதலிரு நாட்களும் அதாவது ஜூலை நான்காம், ஐந்தாம் திகதிகளில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையினாலும், சிகாகோ தமிழ்ச் சங்கத்தினாலும் ஒழுங்கு செய்யப்பட்ட கலை நிகழ்ச்சிகள், நடனம், பட்டிமன்றம், தமிழிசை, சொற்பொழிவுகள், கீழடி ஆய்வு சிறப்புரை, கவியரங்கம், பரிசளிப்பு, மெல்லிசை, மரபிசை, தமிழ்விழா மலர் வெளியீடு என்பன சிறப்பாக நடைபெற்றன.


இறுதி இரண்டு நாட்களும் பத்தாவது தமிழாராய்ச்சி மாநாடும் பல்வேறு நாட்டு தமிழ் அறிஞர்களின் கட்டுரை சமர்ப்பிக்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.


நிகழ்ச்சிகள் அனைத்தும் மண்டபத்தின் பிரமாண்டமான அரங்கிலும் கட்டுரை வாசிப்புகள் அனைத்தும் மண்டபத்துடன் இணைந்துள்ள அறைகளிலும் நடைபெற்றன. இந்த மாபெரும் முப்பெரும் விழாவிற்கு இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், ரஷ்யா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இலண்டன், இத்தாலி, அவுஸ்திரேலியா, மலேசியா, நோர்வே போன்ற பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த அறிஞர்கள், கலைஞர்கள், பார்வையாளர்கள் ஆகியோரை நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்திற்கு அருகே இருந்த பல 5 நட்சத்திர ஹோட்டல்களில் சகல வசதிகளுடனும் தங்கவைத்து காலையில் பேருந்துகளில் மண்டபத்திற்கு அழைத்துச் செல்ல நூற்றுக்கணக்கான தன்னார்வத் தொண்டர்கள் அல்லும் பகலும் கண்ணுறங்காது உழைத்தமை கண்கொள்ளாக் காட்சியாகும்.
அனைவருக்கும் மூன்றுவேளை உணவும் மண்டபத்திலேயே தாராளமாக வழங்கப்பட்டது. 


முதல் நாள் நிகழ்வு காலை ஒன்பது மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து திருக்குறள் மறை ஓதலும், அமெரிக்க நாட்டுப் பண்ணும் இசைக்கப்பட்டு மங்கல விளக்கேற்றப்பட்டது. அடுத்து வரவேற்பு நடனமாக ‘செந்தமிழ் வணக்கம்’ நிகழ்ச்சி நடைபெற்றது. வரவேற்புரை நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர் வீரா.வேணுகோபால், தலைவர் சிகாகோ தமிழ்ச்சங்கம் மணி– குணசேகரன், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைத் தலைவர் சுந்தர் குப்புசாமி ஆகிய மூவரும் நிகழ்த்தினார்கள்.


அடுத்து மங்கல இசையைத் தொடர்ந்து  ஸ்டாலின் குணசேகரன் “தமிழ்… தமிழர்…” என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து சிகாகோ தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த ராஜேஷ் ஜெயராமன் அவர்களின் திரைப்படப்பாடல் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அடுத்து அயோவா தமிழ்ச் சங்கத்தினரின் ஒயிலாட்டம், கரகாட்டம் நிகழ்ச்சியும், மத்திய இலினாய்சு தமிழ்ச் சங்கத்தினரின் கிராமிய நடனமும், நியூயோர்க் தமிழ்ச் சங்கத்தினரின் “தமிழும், நாமும்” நாட்டிய நாடகமும், கலிபோர்ணியா தமிழ்ப் பள்ளிகளின் காணொளி ஒன்றும், சிகாகோ தமிழ்ச் சங்கத்தினரின் “தமிழரின் வாழ்வியல் பெருமை” நாடகமும் இடம்பெற்றன. அனைத்து நிகழ்ச்சிகளுமே மண்டபம் நிறைந்த மக்களின் கண்களையும், கருத்தையும் கவர்ந்தன என்றால் அது சற்றும் மிகையல்ல. 


மதிய உணவு இடைவேளையின் பின்னர் பல அரிய கட்டுரைகள் அடங்கிய மிகவும் கனதியான “தமிழ்விழா மலர்” வெளியீடு இடம்பெற்றது. இந்த மலர் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கட்கும் இலவசமாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க தாகும். தொடர்ந்து கவிஞர் சால்மா தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. தொடர்ச்சியாக முன்னரே குறிப்பிட்டது போல அமெரிக்காவிலுள்ள பல்வேறு தமிழ்ச் சங்கங்கள் பல்வேறு நல்ல பல கலைநிகழ்ச்சிகளை நடாத்தின. சிறப்பு நிகழ்ச்சிகளாக தமிழறிஞர் ஜி.யு.போப் அவர்களின் 200ஆம் ஆண்டு விழாவையொட்டிய தமிழகப் பேராசிரியர் ஞானசம்பந்தனின் சிறப்புப் பேரு ரையும், ‘உலகத் தமிழர் விழிப்புணர்வு நேரம்’ பற்றி ஓய்வுநிலை மனித உரிமை ஐ.நா. பிரதிநிதி நவநீதம்பிள்ளை அவர்களின் உரையும், இளம் சாதனையாளர் விதியன் நாதஸ்வரம் பாராட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றன. 
மாலை 5.00 மணிக்கு “கீழடி ஆய்வு” சிறப்புரையை க.வெங்கடேசன் (பா.உ) நிகழ்த்தினார். அவர் தமது உரையில் “கீழடி – நம் தாய்மடி” என்பதை வலியுறுத்தி கீழடி ஆய்வு பற்றி பல நல்ல கருத்துக்களை எடுத்துரைத்தார். தொடர்ந்து கலாநிதி கனக்ஸ் கனகேஸ்வரன் அவர்களின் “முரசு” நேர்த்திசை நிகழ்ச்சி நூற்றுக்கணக்கான இசைக்கலைஞர்களுடன், பல்வேறு பக்க வாத்தி யங்கள் சகிதம் பார்வையாளர்களின் அமோக பாராட்டுகளுடன் நடைபெற்றது. அன்றைய தினத்தின் இறுதி நிகழ்ச்சியாக நிகழ்ச்சிகளின் மணி மகுடமாக பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் தலைமையில் எஸ்.ராஜா, திருமதி.பாரதி பாஸ்கர், வடஅமெரிக்க பேச்சாளர்கள் பங்குகொண்ட பட்டிமன்றம் இடம்பெற்றது. மனம் நிறைவான நிகழ்ச்சிகளுடன் நள்ளிரவு 12.00 மணியளவில் முதல் நாள் நிகழ்ச்சிகள் இனிதே நிறைவுற்றன. 

இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் வழமைபோல் காலை 9 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பமாகியது. அடுத்து ஜேம்ஸ் வசந்தனின் “திருக்குறள் மறை ஓதல்” நிகழ்ச்சி இடம்பெற்றது. தொடர்ந்து வீணை மங்கல இசையும், கனடா தமிழ்க் காங்கிரஸின் “தமிழுக்கு வந்தனம்” நிகழ்ச்சியும் நடைபெற்றன. தொடர்ந்து திருக்குறள் தேனீ இறுதிச் சுற்றும், இளையோர் தின போட்டிகள், நட்சத்திரம் – 2019 நிகழ்ச்சியும், குறும்படப் போட்டிகள் முடிவும் இடம்பெற்றன. 
மதிய உணவு இடைவேளையின் பின்னர் “தமிழிசை” நிகழ்ச்சியை டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் பக்க வாத்தியங்களுடன் வழங்கினார். அன்னாரின் இசைநிகழ்ச்சி மதிய உணவின் பின்னர் வரும் உறக்கத்தையும் போக்கடித்து உற்சாகத்தை அளித்தது. 
இரண்டாம் நாள் இறுதி நிகழ்ச்சியாக யுவன் சங்கர் ராஜாவின் “மெல்லிசை இரவு” நிகழ்ச்சி நள்ளிரவையும் தாண்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி இளைஞர்களுக்குப் பெருவிருந்தாக அமைந்தது. ஆடல், பாடலுடன் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் இனிதே நிறைவுற்றன. 
06.07.2019 சனிக்கிழமை முப்பெரும் தமிழ் விழாவின் மூன்றாம் நாள்– பெரிய மண்டபத்தில் வழமையான நிகழ்ச்சிகள் நடைபெற, மண்டபத்தின் சுற்றிலும் மேல்மாடியிலுமுள்ள அறைகளில் பல்வேறு நாட்டு அறிஞர்களின் கட்டுரைகள் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
மண்டபத்தில் காலையில் நாடு கடந்த தமிழீழப் பிரதிநிதி உருத்திரகுமார் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். மண்டபம் நிறைந்த மக்கள் மத்தியில் தமது மனதிலுள்ள அனைத்தையும் அள்ளிக்கொட்டினார். ஈழத்தமிழ் மக்கள் படும் அவஸ்தைகள் பற்றிக் குறிப்பிட்டு, “தமிழன் இல்லாத நாடும் இல்லை; தமிழனுக்கென்று ஒரு நாடும் இல்லை” என்று கூறி “தமிழீழம் அமையும் நாள் அண்மித்து விட்டது” என்று தமதுரையை உணர்ச்சிகரமாக முடித்தார்.
மதிய உணவு இடைவேளையின் பின்னர் “இளைஞர்களுக்கு பாரதி” என்ற தலைப்பில் திருமதி பாரதி பாஸ்கரும், “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” (புறநானூற்று உரை) என்ற தலைப்பில் பேராசிரியர் சாலமன் பாப்பையாவும் உரையாற்றினார்கள்.

தொடர்ந்து நடைபெற்ற செந்தில் – இராஜலட்சுமியின் “மரபிசை” நிகழ்ச்சி நள்ளிரவுவரை நடைபெற்றது. பார்வையாளர்கள் அனைவரையும் –ஆடச் செய்தது அவர்களின் மரபிசை நிகழ்ச்சி.

மண்டபத்தின் வெளியே சங்கங்களின் சங்கமம் அணிவகுப்பு –அரங்கைச் சுற்றியுள்ள பெரிய வீதியில் மாலை 4.00 மணிக்கு ஆரம்பமாகியது. இந்நிகழ்ச்சியில் பங்குபற்றிய அனைத்துச் சங்கங்களும் ஊர்திகள், கோலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், பறை, மேளம், நாதஸ்வரம், தப்பு எனத் தூள்கிளப்பின. இந்நிகழ்ச்சி பொழுது சாயும்வரை அதாவது இரவு 9.30 மணிவரை மணிமகுடத்தில் மரகதம் வைத்தாற்போல் மிகச் சிறப்பாக நடந்தேறியது. 

இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை 07.07.2019 காலை 8.30 மணிமுதல் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என அறைகளுக்கு அழகாகப் பெயரிட்டு பல்வேறு நாட்டு அறிஞர்கள் பல்வேறு தலைப்புக்களில் தமது கட்டுரைகளைச் சமர்ப்பித்தார்கள். நேரம் கருதி அவர்களின் கட்டுரைகளின் சுருக்கமே வாசிக்கப்பட்டன. 


ஈழத்தவரின் கட்டுரைகள்:

பத்தாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை முன்னிட்டு நான்கு ஈழத்தமிழர்களின் கட்டுரைகள் ஏற்கப்பட்டு அரங்குகளில் அவர்களாலேயே வாசிக்கப்பட்டு பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றமை இங்கு கவனத்திற்குரியதாகும்.

1) பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்கள் “பண்பாட்டு – ஒரு மதிப்பீடு” என்ற தலைப்பில் “முல்லை” அரங்கில் தமது கட்டுரையைச் சமர்ப்பித்தார்.

2) பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள் பேராசிரியர் சுந்தரமூர்த்தி அவர்கள் தலைமையில் “நெய்தல்” அரங்கில் “புறநானூற்றுப் பாடல்களும், யப்பானிய மன்யோகப்புறப் பாடல்களும் –ஓர் ஒப்பாய்வு” என்ற தலைப்பில் தமது கட்டுரையைச் சமர்ப்பித்தார்.

3) வண – ரூபன் மரியாம்பிள்ளை அடிகளார் வா.செ.குழந்தைசாமி அரங்கில் அமுதன் அடிகளார் தலைமையில், “தனிநாயகம் அடிகளாரின் பத்திரிகைப் பணிவழி தமிழ்ப்பணி” என்ற தலைப்பில் தமது கட்டுரையைச் சமர்ப்பித்தார்.

4) வண – பாவிலு கிறிஸ்து நேசரட்ணம் அடிகளார் (மன்னார் தமிழ்நேசன் அடிகளார்) அதே அரங்கில் “தமிழியல் ஆய்வில் கமில் சுவலபில் அவர்களின் தனித்துவமான பங்கு” என்ற தலைப்பில் தமது கட்டுரையைச் சமர்ப்பித்தார்.

மொத்தத்தில் நான்கு நாட்கள் நிகழ்ச்சிகளும் உள்ளத்தையும், உணர்வையும் உருக்குகின்றனவாக, தமிழுணர்ச்சியைத் தட்டி எழுப்புவனவாக அமைந்தன. 

மேலும் ஈழத்தையும், தமிழகத்தையும் தவிர்த்துப் புலம்பெயர் நாடுகளிலும் தமிழுணர்வு  கொடிகட்டிப் பறக்கின்றது என்று நூற்றுக்கு நூறு வீதம் நிச்சயம் நம்பலாம்!   

(தொடரும்)

இணுவையூர் 
கலாபூஷணம் ஆ.இரகுபதி பாலஸ்ரீதரன்