You are here : churches

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS
ஞாயிறு சிந்தனை - “விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே”

2018-08-12


 "மிருகங்களுக்குப் பசியில்லாதபோது, வன்முறையும் இல்லை. மனிதர்கள் மட்டும் ஏன் காரணம் ஏதுமின்றி வன்முறைகளில் ஈடுபடுகின்றனர்?" என்ற கேள்வியை  இந்தப் படம் எழுப்புகின்றது.

 

பசியையும், வன்முறையையும் இணைக்கும் இந்தக் கேள்விக்கு, எளிதான விடைகள் இல்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக, நாம் வாழும் இன்றைய உலகில், காரணம் ஏதுமின்றி வெடிக்கும் வன்முறைகளால், அப்பாவி மக்கள் கொல்லப்படுவதையும், குழந்தைகள், குறிப்பாக, பெண் குழந்தைகள் துன்புறுவதையும் காணும்போது, வன்முறைகளுக்கு முடிவே கிடையாதா என்ற விரக்திக்கு நாம் அடிக்கடி தள்ளப்படுவதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.


மனிதர்களுக்குப் பசி வந்தால், பத்து பண்புகள் பறந்து போய்விடும் என்பதை, தமிழ் மூதறிஞர் ஔவைப்பாட்டி சொல்லிச் சென்றார். மானம், குலப்பெருமை, கற்ற கல்வி, அழகிய தோற்றம், பகுத்தறிந்து பார்க்கும் அறிவு, தானம் செய்வதால் வரும் புகழ், தவம் மேற்கொள்ளும் ஆற்றல், முன்னேற்றம், விடாமுயற்சி, பெண்மீது கொள்ளும் காதல் உணர்வு ஆகிய பத்து பண்புகளும், பசியால் வாடும் ஒருவரிடமிருந்து ஓடிவிடும் என்பதை 'நல்வழிப்பாடல்' என்ற தொகுப்பில் பட்டியலிட்டுள்ளார், ஔவைப்பாட்டி.


அவர் இங்கு 'பசி' என்று குறிப்பிடுவது, நமது வயிற்றுப் பசி. உடல் தொடர்புடைய இந்தப் பசி, நமக்கும், ஏனைய உயிரினங்களுக்கும் பொதுவானது. ஆனால், அதைத் தாண்டி, மனிதர்கள் மட்டும் அறிவுப்பசி, அதிகாரப்பசி, ஆணவப்பசி, ஆசைப்பசி, காமப்பசி, கோபப்பசி என்று, வேறு பல வடிவங்களிலும் 'பசி'யால் வாடுகின்றனர். வயிற்றை வாட்டும் பசி என்றால், அதை உணவைக்கொண்டு தீர்த்துவிடலாம். ஆனால், நமது மனதையும் அறிவையும் வாட்டும் வேறு பல பசிகளை, தீர்க்கும் வழியறியாது தவிக்கும்போது, வன்முறை என்ற வழியை தெரிவு செய்கிறோம்.
கடந்த இரு ஞாயிறு வழிபாடுகளில், பசியையும், உணவையும் இணைக்கும் விவிலியப் பகுதிகளைச் சிந்தித்து வந்துள்ளோம்.

இன்று, மூன்றாவது வாரமாக, பசியும், உணவும் நம் சிந்தனைகளை மீண்டும் நிறைக்கின்றன. இந்த வாசகங்களில், வயிற்றுப்பசி, உணவளித்தல் என்ற கருத்துக்கள் மையமாகக் காணப்பட்டாலும், இவற்றைச் சிறிது ஆழமாக அலசும்போது, மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பல்வேறு ‘பசி’கள், இந்த வாசகங்களில் வெளிப்படுவதையும் நாம் உணரலாம். எடுத்துக்காட்டாக:
பாலைநிலத்தில் அமர்ந்து, தாம் சாகவேண்டுமென்று மன்றாடிய இறைவாக்கினர் எலியாவுக்கு, வானதூதர் உணவளிக்கும் நிகழ்வு, இன்றைய முதல் வாசகமாகத் தரப்பட்டுள்ளது (1அர.19:4-8). இப்பகுதியை மேலோட்டமாக சிந்திக்கும்போது, பசித்திருந்த இறைவாக்கினருக்கு வானதூதர் உணவளித்தார் என்ற அளவில் நமது சிந்தனைகள் நின்றுபோக வாய்ப்புண்டு. ஆனால், எலியா ஏன் பாலை நிலத்திற்குச் சென்றார் என்பதை சிந்திக்கும்போது, இந்த நிகழ்வில் புதைந்திருக்கும் வேறுவகையானப் பசிகளும், அவை உருவாக்கும் வெறிகளும் வெளிப்படுகின்றன.


இஸ்ரயேல் அரசன் ஆகாபுவின் மனைவி ஈசபேல், எலியாவைக் கொல்லும் வெறியில் –பசியில் - இருந்ததால், எலியா, பாலை நிலத்திற்கு ஓட வேண்டியதாயிற்று. அரசி ஈசபேல் வணங்கிவந்த பாகால் தெய்வம், பொய்யான தெய்வம் என்பதை, இறைவாக்கினர் எலியா, அரசருக்கும், மக்களுக்கும் உணர்த்தியதால், ஈசபேல், எலியாவைக் கொல்லும் வெறி கொண்டார்.


தெய்வ வழிபாடு என்பது, மனிதர்கள் மேற்கொள்ளும் ஓர் உன்னத முயற்சி. ஆனால், உண்மை தெய்வங்களை புறந்தள்ளிவிட்டு, பணம், பதவி, போன்ற பொய் தெய்வங்களை வழிபடும் மனிதர்களை அவ்வப்போது சந்தித்து வருகிறோம். அத்தகைய வழிபாடுகளில் ஈடுபட்டிருப்போரிடம், அத்தெய்வங்கள் பொய்யானவை என்பதைத் துணிந்து சொன்ன மனிதர்களை, அவர்கள், தங்கள் கொலைப்பசிக்கு இரையாக்கியுள்ளதையும் நாம் அறிவோம். அவர்களில் ஒருவரான அரசி ஈசபேல், எலியாவைக் கொல்லத் துரத்துகிறார்.


தமிழகத்தில், 'ஸ்டெர்லைட்', கூடங்குளம், 'டாஸ்மாக்' என்ற பல அரக்கர்களை வழிபட்டு வரும் அரசுக்கும், முதலாளிகளுக்கும் எதிராக மக்கள் மேற்கொண்ட போராட்டங்கள், நம் நினைவுகளை கீறுகின்றன. இந்தப் போராட்டங்களில் உயிர் துறந்த தியாக உள்ளங்கள் இறைவனின் அமைதியில் இணையவேண்டும் என்றும், இவர்கள், தொடர்ந்து, மக்களின் போராட்டங்களுக்கு உந்துசக்தியாக இருக்கவேண்டும் என்றும் சிறப்பாக வேண்டிக்கொள்வோம்.
போலி தெய்வங்களோடும் அவற்றை வழிபடும் மனிதரோடும் மேற்கொள்ளும் போராட்டம் நீண்டது என்றும், அப்போராட்டத்திலிருந்து தப்பித்துச் செல்லாமல், அதைத் துணிவுடன் சந்திக்க, இறைவன் நமக்குத் தேவையான சக்தியை, தன் வானதூதர் வழியாக, வழங்குவார் என்றும் இன்றைய முதல் வாசகம் சொல்லித் தருகிறது. வானதூதர் தந்த உணவினால் ஊட்டம் பெற்ற இறைவாக்கினர் எலியா, தன் போராட்டத்தைத் தொடர, இறைவனின் மலையை அடைந்தார் என்று இன்றைய முதல் வாசகம் நிறைவு பெறுகிறது.
-வத்திக்கான்