You are here : life

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




மகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி?

2019-03-03


சிவ ராத்திரி விரதம் சைவர்கள் அனைவரும் கடைப்பிடிக்கும் மிகமுக்கிய விரதமாகும். மாதாந்தம் சிவராத்திரி விரதம் இருந்த போதிலும் மாசிமாத சிவராத்திரி விரதமே மிக முக்கியமாக அனைவாலும் அனுஷ்டிக்கப்படுகின்றது. 


சிவராத்திரி தினத்தில் விழ்த்திருந்து இறைவனை பிராத்தனை செய்தால் தெரிந்தோ தெரியாமலோ  செய்த பாவங்கள் அனைத்தும் நம்மை விட்டு நீங்கிப் போகும் எனவும் அனைத்து வேதங்கள் மற்றும் புராணங்களை கற்ற பயன் கிடைக்கும் எனவும்  சிவராத்திரி பற்றிய புராணகதைகள் குறிப்பிடுகின்றன.


மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி நாள் மகா சிவ ராத்திரியாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளின் சிறப்புகள் குறித்து கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மகா சிவ ராத்திரி நாளில் விரதம் இருப்போருக்கு கிடைக்கும் மகத்துவங்கள் என்ன என்பது பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவராத்திரி வரலாறு
மாசிமாதம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாலேயே இந்த நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.


பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டநிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள். பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூசித்த இந்த இரவை, தேவர்களும் மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே - அதாவது `சிவராத்திரி‘ என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள்.


சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் - மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை; தங்களை (சிவனை)ப் பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும். அருள் புரியுங்கள் என்று அன்னையானவள் வேண்டிக் கொண்டாள்..


சிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அந்த இரவே `சிவராத்திரி‘ என வழங்கப்பட்டு, அனைவராலும் கொண்டாடப்படுகிறது. பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப் பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்பது நியமம். ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின் படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று.


மகாசிவராத்திரி தினத்தில் புலிக்கு பயந்து வில்லமரத்தில் தஞ்சம் புகுந்த வேடுவன் நித்திரை வராமல் இருக்க இரவு முழுதும் வில்ல இலைகளை பறித்து கிழே போட்டான். அவன்  அவ் இலைகள் மரத்தின் அடியில் இருந்த சிவலிங்கத்திற்கு அர்ச்சனையாகின.

நான்கு ஜாமங்கள் முடிவில் சிவனபெருமான் அன்னைக்கு கொடுத்த வாக்குப்படி வேடுவனுக்கு காட்சி கொடுத்து மோட்சம் வழங்கினார். இந்த நிகழ்வு சிவராத்திரி விரத மகிமையை உலகுக்கு உணர்த்துவதாக உள்ளது.

சிவராத்திரி விரதம் கடைபிடிக்க வேண்டிய விரதமுறை
சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு வேளை மட்டுமே உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, சூரிய உதயத்தின் போது காலையில் வீட்டில் செய்ய வேண்டிய பூஜையை முடிக்க வேண்டும். அதன் பின் சிவன் கோவிலுக்குப் போய் முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும். 
சிவபூஜை செய்யும் இடத்தை மலர்களால் அலங்கரித்து நண்பகலில் குளித்து மாலையில் சிவார்ச்சனைக்கு உரிய பொருட்களோடு சிவன் கோவில் சென்று ஏற்பாடுகளைச் செய்யலாம். மாலையில் மீண்டும் குளித்து வீட்டில் சிவபூஜை செய்ய வேண்டும். வீட்டிலேயே இரவின் நான்கு ஜாமங்களிலும் முறைப்படிப் பூஜை செய்தலும் நலம். வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தல் சிறப்பு தரும்.
மகா சிவ ராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவதுடன், பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்க வேண்டும். சிந்தையில் அமைதியுடன் சிவ புராணத்தை பாடிக் கொண்டிருக்க வேண்டும். பற்றற்று இருப்பதுடன் பேராசைகளைக் கைவிட்டு பிறருக்குத் தீங்கிழைக்காமல் இருத்தல் வேண்டும்.
அன்றையதினம் இரவில் நான்கு ஜாமங்களிலும் தூங்காமல் பூஜை செய்து, மறுநாள் விடியற்காலையில் நீராடி, காலை அனுஷ்டானத்துடன் உச்சிக்கால அனுஷ்டானத்தையும் அப்போதே முடிக்க வேண்டும். அதன் பின் தீட்சை தந்த குருவைப் பூஜை செய்து விட்டு, உடைகள் மற்றும் உணவினை அந்தணர்க்கு தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.

விரத பலன்கள் 
புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடை பிடிப்பது, நூறு அசுவமேத யாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டால் கிடைக்கும் பலனை, ஒரு சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிப்பதால் பெறலாம்.


இப்படி இருபத்து நான்கு வருடங்கள் சிவராத்திரி விரதமிருந்தால் அவர்கள் சிவகதி அடைவார்கள். அத்துடன் அவர்களின் மூவேழு தலை முறைகளும் நற்கதி அடைந்து, முக்தியை அடைவது சத்தியம் என்கிறது புராணங்கள்


இந்த நாளில் சிவன் கோயில்களுக்குச் சென்று ஈஸ்வரனை வழிபட்டால் மன அமைதி, வாழ்க்கையில் முன்னேற்றம், தீய சக்திகள் நீங்கி நன்மைகள் நமக்கு உண்டாகும். 

சிவராத்திரி விரதம் கடைபிடிக்க இயலாதவர்கள் இரவு முழுதும் சிவபுராணம் படித்து கண்விழித்திருக்கலாம்.