You are here : lifestyle

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




சௌபாக்கியம் அருளும் ஆனித்திருமஞ்சனம்

June,17,2018


சிவாலயங்களில் நடராஜருக்கு நடத்தப்பெறும் அபிஷேக விழாக்களில் சிறப்பான விழாக்கள் இரண்டு. ஒன்று மார்கழித்திருவாதிரை. மற்றொன்று  ஆனி உத்திர நட்சத்திரத்தன்று நடக்கும் திருமஞ்சனம். இவ்விரு நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடக்கும். சித்திரை திருவோணம்,  ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மாசி சதுர்த்தசி ஆகிய நாட்களில் மாலைநேரத்தில் அபிஷேகம் நடத்தப்படும். இன்றைய தினத்தில் தான் நடராஜர் சன்னதிகளில் ஆனித்திருமஞ்சனம் நடக்கிறது. பக்தர்கள் நடராஜரைத் தரிசித்து தங்கள் வேண்டுதலை வைக்க  ஆனித்திருமஞ்சனம் மிக நல்லநாள். கலையார்வம் மிக்க மாணவர்கள் இன்றைய தினம் அவசியம் நடராஜரைத் தரிசிக்க வேண்டும்.


ஆனி திருமஞ்சனத்தை ஆடலரசனான நடராஜ பெருமானுக்குரிய நாளாகப் போற்றப்படுவதால், எல்லாச் சிவ ஆலயங்களிலும் ஆனித் திருமஞ்சனம் விழாவாகவே கொண்டாடப்படுகிறது. சிவபெருமான் திருவாதிரை நட்சத்திரத்திற்கு உரியவர். இந்த நட்சத்திரம் அதிக உஷ்ணத்தைத் தரும். மேலும் சிவன் ஆலகால விஷத்தை உண்டபோது அதைக் கண்டத்தில் நிறுத்தியதால், நீலகண்டனாகி அவர் தேகம் உஷ்ணத்தால் பாதிக்கப்பட்டது. அத்துடன் வெம்மையுள்ள சாம்பலைத் திருமேனியில் தரித்து, எப்போதும் திருக்கரத்தில் அக்னியை ஏந்திக் கொண்டிருப்பதால், சிவபெருமான் பொன்னார் மேனியாய் காட்சி அளிக்கிறார். அபிசேக பிரியரான நடராஜ பெருமானுக்கு, பால், தயிர், பஞ்சாமிர்தம், நெய், சந்தனம் என 36 வகையான பொருட்களைக்கொண்டு வருடத்திற்கு ஆறுமுறை மிகச் சிறப்பாக அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன. இதில் ஆனித் திருமஞ்சனம் அதிகாலை வேளையில் தேவர்களால் நடத்தப்படுகிறது. அதனையொட்டி சிவாலயங்களில் நடராஜப் பெருமானுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது.


பிற சிவ ஆலயங்களைக் காட்டிலும், சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்னும் விசேசமாகச் சிறப்பிக்கப்பட்டு பத்து நாட்கள் திருவிழாவாகவே கொண்டாடப்படுகிறது. ஆனித் திருமஞ்சன விழாவைச் சிதம்பரத்தில் ஆரம்பித்து வைத்தவர் பதஞ்சலி மகரிஷி.
ஆனித் திருமஞ்சனம் போன்ற விழா சமயங்களில் கோவிலுக்குச் சென்று அபிஷேக, ஆராதனைகளில் கலந்துகொண்டால் அஷ்ட ஐஸ்வர்யங்கள் நிறைந்து பெருகும், என்பது அருளாளர்களின் சொல் வாக்கு. ஆனித் திருமஞ்சனத்தின்போது நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டால் பேறுகள் பல பெறலாம். அபிஷேகத்திற்கு பக்தர்கள் அளிக்கும் பொருட்களால் அவர்கள் குடும்பத்திற்கு நல்ல பலன் கிட்டும் என்பது இறை நம்பிக்கையாக உள்ளது. அதனால், அபிசேகத்திற்கு செல்லும்போது, நம்மாள் முடிந்த அபிசேக பொருட்களைச் கொண்டு செல்வது சிறப்பு. ஆனித் திருமஞ்சன வைபவங்களில் சுமங்கலிகள் கலந்துகொள்ளும்போது, நீடுழி வாழ்கின்ற சுமங்கலி பாக்கியத்தை அவர்கள் பெறுகிறார்கள். அத்துடன் இளம் வயதினருக்கு நல்ல இடத்தில் வரன் கூடிவரும் என்பது காலம் காலமாக இருந்து வரும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.


ஆனி மாதம் நடராஜப் பெருமானுக்கு நடைபெறும் திருமஞ்சனத்தன்றுதான் வசந்த பஞ்சமி, சமீகௌரி விரதம் ஆகியவையும் அனுசரிக்கப்படுகிறது. இந்த உன்னத திருநாளில் முறைப்படி விரதம் இருந்து, மனமுருக வேண்டி.. ஆடலரசனின் அருளை நாமும் பெறுவோம்!