You are here : mosques

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS
இஸ்லாம்: “தொழுகையே துணை”

November 24 , 2017


தொழுகை என்பது வெறும் சடங்கு, சம்பிரதாயமல்ல. அது நமது உடலையும், உள்ளத்தையும் பரிசுத்தப்படுத்தும் அற்புத கருவியாகும்.

மனிதன் இறைவனுக்குச் செய்ய வேண்டிய முதல் முக்கியக் கடமையே ஐந்து நேரத்தொழுகைகள் தான். இதன்மூலம் மனித வாழ்வில் தொழுகைக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறது என்பதை நாம் நன்கு அறியலாம். இன்றைக்கு அந்த தொழுகைகளை நாம் சரிவர நிறைவேற்றுகிறோமா என்று ஒருகணம் யோசிக்க வேண்டியதிருக்கிறது.

‘(நம்பிக்கையாளர்களே) அனைத்து தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத்தொழுகையையும் (நேரம் தவறாமல்) பேணி(த் தொழுது) கொள்ளுங்கள். மேலும், (தொழுகையின் போது) அல்லாஹ்வுக்குப் பயந்து மிக்க உள்ளச்சத்தோடு நில்லுங்கள்’. (திருக்குர்ஆன் 2:238)

தொழுகை எப்படி நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை இவ்வசனம் தெளிவுபடுத்துகிறது. அதாவது தொழுகையின் காலநேரத்திலும், தொழுகையின் செயல் முறையிலும் நாம் மிகச்சரியாக இருக்க வேண்டும் என்பதே அது.

ஒருமுறை நபித்தோழர் ஒருவர் அரை குறையாக தொழுது கொண்டிருப்பதைக் கண்ட ஹூதைபா அல் யமான் என்ற நாயகத்தோழர், தொழுகைக்குப் பின் அவரை அழைத்து, ‘தோழரே நீர் சரியாக தொழவில்லை. ஒரு வேளை நீர் மரணித்தால் நபியின் வழிமுறையை விட்டுவிட்ட நிலையில் தான் மரணிப்பீர்’ என்று கண்டித்தார்கள். (நூல்: புகாரி)

இந்த நிகழ்வு நமக்கு ஒரு செய்தியை அழுத்தமாகக் கூறுகிறது. அதாவது, ‘நீங்கள் ஐங்காலத் தொழுகைகளை தொழுவது பெரிதல்ல. அதைசரிவர முறையாக, நிறைவாகச் செய்வதே பெரிது’ என்கிறார்கள் நபிகளார்.

முன்னதாக தொழுகையின் சிறப்பை, மகத்துவத்தை நாம் நன்கு அறிய வேண்டும். அப்போது தான் தொழுகை களின் மீது மதிப்பும், மரியாதையும் உண்டாகும்.

‘சொர்க்கத்தின் சாவி தொழுகை’ என்று நபிகளார் கூறினார்கள். இதைவிட வேறு என்ன உவமை வேண்டும் நமக்கு.

சுவனத்திற்குள் நுழைய வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இல்லை. ஆனால் அதற்காக நாம் என்ன நற்செயல்கள் செய்தோம் என்று பார்த்தால், விடை பூஜ்ஜியமாகத்தான் இருக் கிறது. இதனால் தான் நமது அன்றாட வாழ்க்கையும் வெற்றிடமாகவே காட்சியளிக்கிறது.

‘(நபியே) வஹி மூலம் உங்களுக்கு அறிவிக்கப்பட்ட இவ் வேதத்தை (மக்களுக்கு) நீங்கள் ஓதிக் காண்பித்து தொழுகையைக் கடைப்பிடித்து வாருங்கள். ஏனென்றால், நிச்சயமாக தொழுகை மானக்கேடான காரியங்களிலிருந்தும், பாவங்களிலிருந்தும் (மனிதனை) விலக்கிவிடும். அல்லாஹ்வை (மறக்காது நினைவில் வைத்து, அவனை) ‘திக்ரு’ செய்து வருவது மிகமிகப் பெரிய காரியம். நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் நன்கறிவான். (ஆதலால், இவைகளுக்குரிய கூலியை நீங்கள் அடைந்தே தீர்வீர்கள்)’. (திருக்குர்ஆன் 29:45)

தொழுகையின் பலன் என்னவென்று இந்த வசனத்தின் மூலம் நாம் நன்கு அறியலாம்.

‘திக்ரு’ எனப்படும் இறைத்தியானம் செய்வதால் கிடைக்கும் பலனை திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

‘மெய்யாகவே நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் அவர்கள் தாம்; (அவர்கள் முன்) அல்லாஹ்வின் திருப்பெயர் துதி செய்யப்பட்டால், அவர்களுடைய உள்ளங்கள் நிம்மதியடைந்து விடுகின்றன. (ஏனென்றால்) அல்லாஹ்வின் திருப்பெயரை துதி செய்வதனால் (உண்மை நம்பிக்கையாளர்களின்) உள்ளங்கள் நிச்சயமாக நிம்மதி அடையும் என்பதை (நபியே! நீங்கள்) அறிந்து கொள்ளுங்கள்’. (13:28)

இன்றைக்கு மனிதன் நிம்மதியைத் தேடி அலையாத இடமில்லை. எங்கும் பிரச்சினை, குழப்பம், அமைதியின்மை. இந்த நிலையில் ‘உங்களுக்கான நிம்மதி இதோ இந்த ஐந்து நேரத்தொழுகைகளில் இருக்கிறதே’ என்று திருக்குர்ஆன் கூறுவதை நாம் கவனிக்காமல் இருப்பது ஏன்?

ஒருவர் தினமும் ஐந்து வேளை ஆற்றில் குளிக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவரது உடலில் அழுக்குகள் ஏதும் தங்கி இருக்குமா? இருக்காதே. அவ்வாறு தான் இந்த ‘ஐந்து நேரத்தொழுகைகளும் ஒருவரது அன்றாட சிறுசிறு பாவக்கறைகளை நீக்கி விடுகின்றன’ என்று நபிகள் நாயகம் உவமைப்படுத்திக் கூறினார்கள்.

நமது பாவக்கறைகளை ஐங்காலத் தொழுகைகள் போக்கிவிடுகின்றன என்றால் இதைவிட வேறு பாக்கியம் நமக்கு என்ன வேண்டும்.

இன்னொரு இறைவசனம் பேசுகிறது இப்படி:

‘நம்பிக்கையாளர்களே! (நீங்கள் உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவதற்காக) பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்’. (2:153)

‘பொறுத்தவர் பூமியாள்வார்’ என்பார்கள். அந்தப் பண்புடன் தொழுகையும் இணைத்துச் சொல்லப்பட்டிருப்பது நம் கவனத்திற்குரியது. இன்னும் சொல்லப்போனால் தொழுகை தான் மனிதனுக்கு பொறுமையை கற்றுத் தருகிறது என்றால் அதுமிகையல்ல.

காரணம், தொழுகை என்பது அவசர, அவசரமாகச் செய்யப்படும் வணக்க வழிபாடல்ல. நிறுத்தி, நிதானமாகச் செய்யப்பட வேண்டிய ஓர் அற்புதமான வணக்கம் அது.

இதனால் தான் ‘அவசரம் அது ஷைத்தானின் குணம்; நிதானம் அது அல்லாஹ்வின் குணம்’ என்று நபிகள் நாயகம் குறிப்பிட்டார்கள்.

தொழுகை என்பது வெறும் சடங்கு, சம்பிரதாயமல்ல. அது நமது உடலையும், உள்ளத்தையும் பரிசுத்தப்படுத்தும் அற்புத கருவியாகும். இது ஒருவரிடத்தில் மிகச்சரியாக அமைந்து விட்டால், பிறகு அனைத்தும் அவருக்கு மிக இலகுவாக அமைந்து விடும்.

அதேநேரத்தில் தொழுகையை விட்டவர்களுக்கு காத்திருக்கும் கேடுகள் குறித்தும் திருக்குர்ஆன் கீழ் கண்டவாறு எச்சரிக்கிறது:

‘(கவனமற்ற) தொழுகையாளிகளுக்கு கேடுதான். அவர்கள் எத்தகையவர்கள் என்றால், தங்கள் தொழுகைகளை விட்டும் மறந்தவர்களாக இருக்கிறார்கள். (மேலும், அவர்கள் தொழுதபோதிலும் மக்களுக்குக்) காண்பிக்கவே தொழுகிறார்கள்’. (107:4,5,6)

எனவே நமது ஐங்காலத்தொழுகைகளை நன்கு சரிபார்த்துக் கொள்ள வேண்டிய நேரமிது. வாருங்கள், இறையச்சத்துடன் தொழுகையை தொடர்வோம், இறையருளைப் பெறுவோம்.