You are here : mosques

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS
மனமாற்றம் தந்த மாமறை வசனம்

April 11.2018


‘நிச்சயமாக நான்தான் அல்லாஹ். என்னைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. என்னையே நீங்கள் வணங்குங்கள்.

என்னை தியானித்துக்கொண்டே இருக்கும் பொருட்டு தொழுகையைக் கடைப்பிடியுங்கள்’. (திருக்குர்ஆன் 20:14)

முகம்மது நபிகள் (ஸல்) அவர் களின் ஏகத்துவப்பிரசாரம் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே இருந்தது. நபிகளார் கூறிய ஏகத்துவத்தின் சிறப்புகளை மக்கள் ஆர்வத்துடன் கேட்டனர். மேலும் அதை பின்பற்றவும் தொடங்கினார்கள்.

அது குறைஷி குலத்தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக, சிலை வழிபாட்டிற்கு எதிரான அவரது பிரசாரம் குறைஷியரை மிகுந்த கோபத்திற்கு உள்ளாக்கியது.

காரணம், ‘கஅபா’வில் உள்ள எண்ணற்ற சிலைகளை வணங்குவதற்காக வெளியூர்களில் இருந்து வரும் மக்களால் வியாபாரங்கள் செழித்தன.

நபிகளாரின் பிரசாரம் மூலம் விழிப்படைந்த மக்கள் திருந்தினார்கள். இதனால் தங்கள் வருமானத்திற்கு பாதிப்பு ஏற்பட்டதால் நபிகளாரை எதிர்த்தனர் குறைஷிகள்.

எம்பெருமானார் முகம்மது நபிகள் (ஸல்) சிறப்பு மிகுந்த அரபு குலத்தில் தோன்றியவர்கள். அந்தகுலப்பெருமையை கருத்தில் கொண்டு குறைஷி தலைவர்கள் நபிகளாரின் சிறிய தந்தை அபூதாலிப் அவர்களைச் சந்தித்து இவ்வாறு குற்றம் சுமத்தினார்கள்:

உங்களின் அண்ணன் மகன் முகம்மது நமது கடவுள்களை அவமதிக்கிறார். சிலை வணக்கங்களை சாடுகிறார். நமது முன்னோர்களை வழி தவறியவர் களாக சொல்லி நிந்திக்கின்றார். நாம் அடிமையாய் வைத்திருப்பவர்களை தூண்டிவிட்டு அவர்களை சரிசமமாய் மதிக்கச் சொல்கிறார்.

பெண்களைப் போகப் பொருளாக கருதாமல் அவர்களுக்குரிய அந்தஸ்த்தை, உரிமையை கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார். பெண்களிடம் அன்போடும், மென்மையோடும் நடந்து கொள்ளுங்கள் என்கின்றார்.

இவை எல்லாம் நம் கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் விரோதமான நடவடிக்கை. இதனை நாங்கள் சகித்துக் கொள்ள முடியாது. எனவே நீங்கள் புத்திமதி சொல்லி அவரை நம் வழிக்கு வரச்செய்யுங்கள். இல்லை என்றால் நீங்களும் அவரோடு சேர்ந்துகொண்டு எங்களுடன் போர் செய்ய தயாராகுங்கள்.
இவ்வாறு அவர்கள் எச்சரித்தனர்.

தன் அண்ணன் மகனுக்கு ஏற்பட இருக்கும் ஆபத்தை உணர்ந்த அபூதாலிப், நபிகளாரை அழைத்து நடந்த எல்லாவற்றையும் கூறி, குறைஷிகளை அனுசரித்து செல்லுமாறு அறிவுரை வழங்கினார்.

அதற்கு நபிகளார், “என் அருமை சிறிய தந்தையே! இது நானாக ஏற்படுத்திக்கொண்டது அல்ல. ஏக இறைவனாம் எல்லாம் வல்ல அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட இறைத்தூது.

அதனை நான் யாருக்காகவும், எதற்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது. அல்லாஹ் மீது ஆணையாக இந்த குறைஷி தலைவர்கள் எனது ஒரு கையில் சூரியனையும், மறுகையில் சந்திரனையும் வைத்தாலும் நான் ஏகத்துவத்தை பிரசாரம் செய்வதை நிறுத்தி விட முடியாது.

அல்லாஹ்வின் இந்த மார்க்கம் செழிக்கச் செய்வதே என் பணி. அதிலிருந்து நான் சிறிதும் விலகுவதற்கில்லை. இந்தப்பணியில் நான் அழிந்து போனாலும், கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டேன்”, என்று தன் தீர்க்கமான பதிலை சொன்னார்கள்.

இவ்வாறு உறுதிபட சொன்ன அண்ணலாரின் பதில் அபூதாலிபை சற்று சிந்திக்கவைத்தது. “எது எவ்வாறு நடந்தாலும் நான் உங்களை எதிரிகளின் கையில் ஒப்படைக்க மாட்டேன்” என்றார்கள்.

இருப்பினும் நாளுக்கு நாள் எதிரி களின் தொல்லைகள் கடுமையானது. மென்மை உள்ளம் கொண்ட மக்களால் இந்த எதிர்ப்பை சமாளிக்க முடியவில்லை.

ஒரு நாள் இரவில் நபிகள் நாயகம் அவர்கள் இறைவனிடம் “இறைவா, எங்களுக்கு சரியான ஆதரவு தரக் கூடிய ஒருவரைக்கொண்டு எங்களின் கரங்களை உறுதிப்படுத்து. அபூஜஹில் அல்லது உமர் கத்தாப் ஆகிய இரு வீரர்களில் ஒருவரை எங்களுக்கு ஆதரவாக திருப்பி விடு” என்று பிரார்த்தனை செய்தார்கள்.

அதே சமயம் குறைஷிகளின் தூண்டு தலின் பேரில் உமர் கத்தாப் நபிகளார் மீது கோபம் கொண்டார். “இந்த பிரச்சினைக்கு காரணம் முகம்மது என்றால் நான் அவரது தலையை கொய்து வருகிறேன். அதன் மூலம் நம் மூதாதையர் கண்ணியத்தை காப்பாற்றுகிறேன்” என்று கூறியவராக வாளுடன் வீதியில் நடக்கத் தொடங்கினார்.

உமரை தெருவில் சந்தித்த நயீம் இப்னு அப்துல்லா என்பவர், “உமரே உருவிய வாளுடன் எங்கே செல்கிறீர்கள்?” என்றார்.

“முகம்மதுவின் நடவடிக்கைக்கு முடிவு காணவே சென்று கொண்டிருக்கிறேன்” என்று பதில் சொன்னார் உமர்.

“அப்படியானால் நீங்கள் முதலில் செல்ல வேண்டியது உங்கள் தங்கையின் வீட்டிற்கே. அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு பல நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. அங்கே செல்லுங்கள்” என்றார்.

“அப்படியா சொல்கிறீர்கள்” என்று கோபத்தோடு தங்கை பாத்திமாவின் வீட்டை நோக்கி நடந்தார் உமர். வீட்டைஅடைந்த போது, வீட்டின் உள்ளிருந்து ஒரு அழகான கவிதைபோன்ற வசனங்கள் யாரோ ஓதுவது போல் கேட்டது. அதனைகூர்ந்து கேட்டு விட்டு கதவைத் தட்டினார்கள். கதவைத் திறந்த தங்கையை கோபாவேசமாய் தள்ளி விட்டார்கள் உமர் அவர்கள்.

‘நீயுமா அந்த முகம்மதுவின் மார்க்கத்தை ஏற்றுக்கொண்டாய்’ என்று ஆவேசமாக கூறினார்.

வீரரின் தங்கை அல்லவா அவர்களும் விட்டுக்கொடுக்கவில்லை. ‘நீங்கள் என்ன வேண்டு மானாலும் செய்துகொள்ளுங்கள். ஏக இறைக்கொள்கையை நாங்கள் விட்டுவிடுவதாக இல்லை’ என்றார்கள்.

தங்கையின் உறுதியான வார்த்தைகளால் அதிர்ந்து போன உமரின் கண்களில் அருகில் கிடந்த தோலில் எழுதப்பட்ட திருக்குர்ஆன் வசனங்கள் பட்டன. அதனை கையில் எடுத்து ஓதத்தொடங்கினார்கள். “நிச்சயமாக நான் தான் அல்லாஹ், என்னையே வணங்குங்கள்” என்ற திருக்குர் ஆனின் தாஹா சூராவின் 14-ம் வசனம் உமர் அவர்களின் மனதில் மாற்றத்தைத் தோற்றுவித்தது.

நபிகளாரின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொண்டு விட்ட நிகழ்வு அங்கே நிறைவேறியது.

உமர் அவர்கள் பதைபதைத்தவர்களாக “நான் திருக்குர் ஆனின் மற்ற வசனங்களையும் ஓதி உணர வேண்டும். இறைத்தூதர் அவர்களைச்சந்தித்து ஏக இறைக்கொள்கையை ஏற்க வேண்டும். எனக்கு வழிகாட்டுங்கள் தங்கையே” என்றார்கள்.

அதன்பின் அண்ணலாரைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் உமர். மாவீரர் உமரின் மனதை மாற்றிய வசனங்கள் தான் மேலே சொல்லப்பட்டுள்ளது.

குர்ஆனின் வசனங்களை நம்பிக்கையோடு ஓதுவோம், நன்மைகளைப்பெற்றுக் கொள்வோம்.