You are here : viharas

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




பார்த்தவுடன் மிரளவைக்கும் உலகின் மிகப்பெரிய புத்தர் சிலை!

April 06.2018


உலகிலேயே அதிக அளவில் சிலைகள் இருப்பது புத்தருக்குத்தான் என்கிறது ஒரு கருத்துக்கணிப்பு.

அதுவும் விதவிதமான நிலைகளில் புத்தர் சிலைகளை நாம் காண முடியும். நின்றபடி, அமர்ந்தபடி, தியானித்தபடி என்று அவரது உருவங்கள் பலவாறாக வடிக்கப்பட்டிருக்கின்றன.

உலக அளவில் சீனா, ஜப்பான், தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் புத்தரின் சிலைகள் அதிகமாக நிறுவப்பட்டுள்ளன. இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல், சீனாவில் ஒரு புத்தர் சிலை இருக்கிறது. இரு மலையின் மத்தியில் குடைந்து உருவாக்கப்பட்டது

உலகில் உள்ள புத்தர் சிலைகளில் மிகப்பெரியதில் இதுவும் ஒன்று. சீனாவின் தெற்குப் பகுதியான லெசான் நகரத்தின் பிரமாண்ட மலையை குடைந்து தான் இந்த பிரமாண்ட புத்தர் சிலையை வடித்திருக்கிறார்கள்.

இந்த சிலை 233 அடி உயரமும், 92 அடி அகலமும் கொண்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். வியப்பை ஏற்படுத்தும் இந்த பிரமாண்ட சிலையின் பின்னால், அது உருவானதற்கான காரணமும் வியப்பை தருவதாக அமைந்திருப்பதுதான் விசேஷம்.

புத்தர் சிலை அமைந்திருக்கும் லெசான் மலைப் பகுதியைச் சுற்றி ‘மின்சியாங்’ என்ற ஆறு ஓடுகிறது. தற்போது அமைதியே உருவாக காணப்படும் இந்த ஆறு, கி.பி. 7-ம் நூற்றாண்டில் ஆக்ரோஷத்தின் உச்சமாக இருந்ததாக கூறப்படுகிறது

அதீத இரைச்சலுடன், அதிகபட்சமான இழுப்பு சக்தியுடன் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்த இந்த ஆற்றைக் கடப்பதும், படகுகளில் பயணம் செய்து மறு கரையை அடைவது என்பதும் அசாத்தியமான விஷயமாகவும், சவாலாகவும் இருந்திருக்கிறது.

இதனால் லெசான் பகுதியில் வசித்து வந்த மக்கள், ‘ஹை டாங்’ என்ற புத்த துறவியிடம் உதவி கேட்டிருக்கிறார்கள். மக்களின் நிலைமையை உணர்ந்த அந்தத் துறவி, ஆற்றின் ஒரு கரையில் புத்தர் சிலை ஒன்றை அமைக்க சொல்லியிருக்கிறார்.

ஆர்ப்பரிக்கும் மனதையே தியானத்தால் அடக்கும் புத்தர்.. ஆக்ரோஷமான ஆற்றையும் அடக்கிவிடுவார்’ என்று நம்பிய மக்களும், சிலை வடிப்பதற்காக பணியைத் தொடங்கினர். அவர்கள் சிலை வடிப்பதற்காக தேர்வு செய்தது ஆற்றை ஒட்டியுள்ள மலையை.

கி.பி.713-ல் தொடங்கிய இந்தப் பணி, மும்முரமாக நடைபெற்றது. புத்தரின் சிலை பாதி வடிக்கப்பட்ட நிலையில், சிலை அமைக்கும்படி ஊக்கம் அளித்து வந்த துறவியான ‘ஹை டாங்’ இறந்து போனார்.