2019-02-10
அறுபடை வீடுகளில் ஒன்றான, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் மாசித்திருவிழா, இன்று (10ம் திகதி) காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
கொடிப்பட்டம் வீதிஉலா
மாசித் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று மாலை யானை மீது அமர்ந்து கொடிப்பட்டம் வீதி உலா நடந்தது. இதை ஒட்டி திருச்செந்தூர் வடக்கு ரதவீதியில் உள்ள 14 ஊர் செங்குந்தர் 12ம் திருவிழா மண்டபத்தில் சிதம்பர தாண்டவ விநாயகருக்கு சிறப்பு பூஜை வழிப்பாடு நடந்தது. தொடர்ந்து கொடிப்பட்டத்துக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் மூன்றாம்படி செப்பு ஸ்தலத்தார் சரவணன் அய்யர் யானை மீது அமர்ந்து கொடிப்பட்டத்தை ஏந்தி வீதி உலா நடந்தது.
இதையடுத்து இன்று (10ம் திகதி) அதிகாலை 1 மணிக்கு கோயிலின் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, கொடிப்பட்டம் பூஜை செய்யப்பட்டு கோயிலைச் சுற்றி வலம் வந்தது.
இன்று (10ம் தேதி) அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெற்று அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், அதனை தொடர்ந்து தீபாராதனை இடம்பெற்று அதிகாலை 3 மணிக்கு வெள்ளி பல்லக்கில் கொடி பட்டம் வீதி உலா வந்ததை தொடர்ந்து கோயில் இரண்டாவது பிரகாரத்தில் உள்ள கொடிமரத்தில் அதிகாலை 5 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இன்று தொடங்கிய திருவிழா, எதிர்வரும் 21ம் திகதி வரை 12 நாட்கள் வெகு கோலாகலமாக நடைபெறுகிறது.
புகழ்மிக்க மாசித் திருவிழாவின் 7ம் திருநாளான எதிர்வரும் 16ம் திகதி அதிகாலை 5 மணிக்கு சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சியும், தொடர்ந்து சுவாமி ஆறுமுக நயினாா் சண்முக விலாசத்திலிருந்து வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருள்வதும் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து, தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தியும், வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தியும், பச்சை கடசல் சப்பரத்தில் பச்சை சாத்தியும் சிறப்பு சப்பர பவனி நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நிகழ்ச்சி 19ம் தேதியும், தெப்பத் திருவிழா 20ம் தேதியும் நடைபெறுகிறது.